Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 4 July 2014

ஆசிரியர் ஒரு செயல் ஆராய்ச்சியாளர்

ஆசிரியர் ஒரு செயல் ஆராய்ச்சியாளர்

‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் ”-என வள்ளுவர் வகுத்த அழியாத கருத்தை ஆழ்மனதில் புகுத்தி அகிலத்தை வலம் வர ஒவ்வொரு மாணவனையும் வழிகாட்டும் ஆசிரியர் தன் பணியில் (கற்பித்தல்) பன்முகத்திறன் பெற்றவராய் விளங்கினாலும்,ஒவ்வொரு மாணவனையும் பட்டைத் தீட்டி அவரவர் வாழ்வில் பளபளக்கும் வைரங்களாக மாற்ற வேண்டிய சிறந்த பொறுப்பை ஏற்கிறார்.

        எனவே தலைசிறந்த பணியைச் சிறப்பாக முடிக்க ஒவ்வொரு ஆசிரியரும்,ஒவ்வொரு நொடியும் ஒரு ஆராய்ச்சியாளராக செயல்பட்டு தனது ஆராய்ச்சியில் வெற்றி கொள்கிறார். ஓர் ஆசிரியர் எவ்வெவ் வகைகளில் தனது ஆராய்ச்சிப் பணியை பரிசீலனை செய்து, பன்முக வெற்றியை சுவீகாரம் எடுக்கிறார், என்பதை இந்தப் பகுதியில் தரம் பிரிப்போம்…
 
கற்பித்தல் பணியில் ஆசிரியரின் ஆராய்ச்சி:
 
          ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது-என்ற கூற்றை அனைவரும் அறிவோம்.நம் திண்ணைப் பள்ளிகளும் இன்று நடைமுறையில் இல்லை.நம் சமுதாயம் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் வியந்து போவோம்.வெகு காலம் கடந்து இன்னும் களைப்படையாமல் நடக்கிறோம்.
இன்றைய சூழலில் கல்வியின் அருமை பெருமைகள் நமக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.கல்வியின் மேம்பாடும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் சம அளவில் உயர்ந்து நிற்கும் தராசுத் தட்டுகள் போலக் காணப்படும் இந்த நிலையில்,உயர்ந்த செறிவுமிக்க கல்வியை மாணவச் செல்வங்களுக்குக் கற்றுத்தர வேண்டுமெனில், ஆசிரியர்கள் மிக்க கற்பித்தல் திறன் உடையவராய் இருப்பது சாலச் சிறந்தது.இன்று ஆசிரியர்கள் மிகநல்ல கற்றல் அனுபவங்களைத் தம்மை நம்பியிருக்கும் மாணவருக்கு வழங்க, முக்கியப் பொறுப்பேற்கும் நிலையில் இருப்பதால் எந்தப் பாடங்களைக் கற்பிக்க முனைந்தாலும் விழிப்போடு ஆராய்ச்சிக்கண் கொண்டு செயல்படுகிறார்கள்.
பாடப் பொருளில் ஆசிரியரின் ஆராய்ச்சிப் பணி :
கற்றல் அனுபவங்கள் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சிறந்த பாடப் பொருள் அவசியம்.மாணவர்க்கு அளிக்கப்படும் பாடப் பொருள் செறிவுடையதாகவும்,எளியனவாகவும்,மாணவரின் வயதிற்கும் அறிவு நிலைக்கும் பொருத்தமுடையதாகவும்,மாணவர்களின் மன நிலைக்கு ஏற்றவாறும்,அவனது திறனை மேம்பாடு செய்வதாகவும், அவனது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், அமைய வேண்டும்.
மனதில் நம்பிக்கை ஒளியூட்டு வதாகவும் அவனது அறிவுப் பசிக்கு தீனி போடுவதாகவும், அவனிடம் ஆராய்ச்சி மனப்பான்மையைத் தோற்றுவிப்பதாகவும்,எந்த ஒரு சிறு செயலையும் அறிவியல் பார்வையோடு அணுக அவனுக்கு வழிகோலுவதாகவும்,முழு ஆளுமைத் திறனை அவர்களுக்குள் வளர்க்க உறு துணை யாகவும், கருத்துச் செறிவுடனும்,பொருட் செறிவுடனும் உண்மையை மட்டுமே உள்ளடக்கி யதாகவும் இருந்து ஆழமாகவும், அழகாகவும் மாணவர் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்தால், அந்த ஆசிரியரால் வழங்கப்படும் கற்றல் அனுபவம் மாணவனை விட்டு எப்போதும் அகலாது.
ஆகவே மேற்கண்ட எல்லா வகைகளிலும் சிறப்பானதொரு பாடப்பொருளை மாணவனுக்கு வழங்க,தனது ஒவ்வொரு கற்பித்தல் நிகழ்விலும் ஆசிரியர் அவரது முயற்சிகளை மாணவருக்கு செயல்களாக வழங்க ஆராய்ச்சி செய்து கொண்டேயிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் ஆசிரியர் பணி தொடரும்வரை இந்த ஆராய்ச்சியும் தொடருமல்லவா? அன்றேல் மிக நல்ல பாடப் பொருளைத் தராதவர் ஆகிடுவாரன்றோ! எனவே,இதன் மூலம் ஆசிரியர் மாணவர்க்கு ஏற்ற பாடப்பொருளைத் தருவதில் செயல் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் என்பது புலனாகிறது…
பல்வேறு கற்பித்தல் முறைகளைக் கையாளும் ஆராய்ச்சியாளர்:
எவ்வளவு செறிவுள்ள,அற்புதமான,அறிவு விருத்தி செய்யும் பாடப் பொருளாக இருந்தாலும்,ஆசிரியர் கற்பித்தல் நிகழ்வுகளை சரியான முறையில் அளிக்காவிடில் அங்கே கற்றல் அனுபவம் சிறந்த முறையில் கிடைக்காது அல்லவா?ஆகவே தன்னிடம் பயிலும் அத்துனைக் குழந்தைகளும் முழுமையாகக் கற்றல் அனுபவங்களைப் பெறுவதற்கு,வகுப்பறையில்,கற்பித்தல் நிகழ்வில் எண்ணிலடங்கா கற்பித்தல்-முறைகளைக் கையாண்டு வெற்றி கொள்ளும் ஆராய்ச்சிப் பணியில் ஆசிரியர் ஈடுபடுகிறார்.
எந்தப் பாடப் பொருளை எந்தக் கற்பித்தல் முறையைப் பயன்படுத்தி வழங்கலாம் என ஒவ்வொரு ஆசிரியருமே சிந்தித்து, கவனமுடன் வகுப்பறையில் அதைப் பயன்படுத்தி,சரியான, ஏற்ற கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்து கற்பித்தலில் வெற்றி காண்கிறார். எத்தனையோ முறைகளை ஆசிரியர்களாகிய நாம் அன்றாடக் கல்வி கற்பித்தலில் பயன்படுத்துகிறோம்….உதாரணமாக,
· விரிவாக்க முறை
· கதை சொல்லல் முறை
· விதி வருமுறை
· விதி விளக்கு முறை
· செய்து-கற்றல் முறை
· ஒப்படைப்பு முறை……………………..என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லா முறைகளையும் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்பது இயலாததும், அவசியம் இல்லாத ஒன்றும் ஆகும்.
அதே நேரத்தில் ஏதாவது ஒரு கற்பித்தல் முறையை அவரவர் வகுப்புச் சூழலுக்கு ஏற்றபடி ஒவ்வொரு கற்பித்தலிலும் ஆசிரியராகிய நாம் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும். அந்தச் சரியான முறையை, தகுந்த வகுப்பறைச் சூழலுக்குப் பயன்படுத்த ஓர் ஆசிரியர் எடுத்துக் கொள்ள முற்படும் ஆராய்ச்சிகளோ ஏராளம்! ஏராளம்!ஆனால் மிகச் சரியான போதித்தல் முறையை ஏற்ற சூழலுக்கு தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் ஆசிரியர் மிகச் சரியான செயலாராய்ச்சியாளர் ஆகிறார்.
இவ்வாறு கற்பித்தல் களங்களில் கற்பிக்கும் முறைகளை அறிமுகம் செய்து வெற்றி பெறும் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சியாளரே.