Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 2 August 2014

இலக்கண குறிப்பு

தமிழ் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இலக்கண குறிப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்.

"அறிவிற் சிறந்த மாணவர்கள் ஆசிரியர் பாடம் நடத்தும் முன்னரே அது பற்றி தெரிந்து கொண்டு ஆசிரியரிடம் அது பற்றி பதிலளிக்க வேண்டும். நான் இப்பொழுது உங்களின் அறிவு திறனை சோதிக்கப் போகிறேன். இலக்கணத்தில் மிக முக்கியமானது செய்வினை, செயப்பாட்டு வினை. இதில் செய்வினை என்றால் என்ன என யாராவது சொல்ல முடியுமா?"

மாணவர்கள் ஒரு சேர "முடியும்" என கத்தி கைகளை தூக்கினார்கள். மாணவர்களின் திறமை குறித்து ஆசிரியருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. புன்னகையுடன் பேசினார்.

"உங்களைப் போன்று திறமையான மாணவர்கள் வாய்க்கப் பெற்ற ஆசிரியர்கள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் உங்களில் ஒருவர் அளிக்கும் பதிலே நீங்கள் அனைவரும் அளித்த பதிலாகும். அதனால் இரண்டாவது வரிசையில் மூன்றாவதாக அமர்ந்திருக்கும் மாணவனை பதில் சொல்ல பணிக்கிறேன்"

மறுநிமிடம்.... வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் எழுந்து அந்த மாணவன் பதில் சொன்னான்.

"நமக்குப் பிடிக்காத எதிரிகளுக்கு மாந்தரீகம் மூலம் சூன்யம் வைத்து அவர்களின் கை கால்களை முடக்கி ரத்தம் கக்கி சாக வைக்கும் முறைக்குப் பெயர் தான் செய்வினை என்பதாகும் ஐயா!"

5 ஆயிரம் தமிழ்ச் சொற்களை கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி

5 ஆயிரம் தமிழ்ச் சொற்களை கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி

மாவட்ட தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழில் 5 ஆயிரம் சொற்களை பிழையின்றி, எழுத மற்றும் வாசிக்கும் வகையில் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மாணவ, மாணவிகள் தமிழை பிழையின்றி எழுத, வாசிக்க கற்றுக் கொள்வதற்கு கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

மொழியை முழுமையாகத் தெரிந்து கொள்ளும்போது தான், மாணவர்கள் பிற பாடங்களையும் ஆழமாக கற்றுக் கொள்ள முடியும். எனவே, தொடக்கப் பள்ளியிலேயே மாணவர்களிடம் தமிழ் வாசிப்பு, எழுத்துத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

அதன்படி தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5ஆம் வகுப்பு பயிலும் போது குறைந்தபட்சம் 5 ஆயிரம் தமிழ் சொற்களை படித்து, புரிந்து கொள்ளும் வகையில் பாடம் கற்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக மாணவர்களுக்கு ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து, சொற்றொடர், சிறுதொடர் என்று படிப்படியாக தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழ்ச் சொற்களை பிழையின்றி வாசித்தல், எழுதுதல் என்று மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் முறையாகப் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், தமிழ் மொழியின் சிறப்பம்சமான ல, ழ, ள எழுத்துக்களை சரியாக உச்சரித்தல், வ மற்றும் ல எழுத்துகளின் வடிவத்தை அதற்கேற்ற முறையில் எழுதுதல் போன்றவற்றின் அவசியம் குறித்தும் விளக்கி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மேலும், மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் சொல் விளையாட்டு நடத்தவும் ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது.

இதற்காக முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) பயிற்சி அளிக்கப்படவுள்ளது என கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.