Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 10 August 2014

பொருள் புரிய வைப்போம்

பொருள் புரிய வைப்போம்

By R.கார்த்திகேயன்.

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்! நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ளக்கிளர்ச்சி அடையச் செய்கின்றது.

நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே! உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!''.

இதுதான் ""ஜன கண மன அதிநாயக ஜய ஹே பாரத பாக்ய விதாதா...'' எனத் தொடரும் இந்திய தேசிய கீதத்தின் அர்த்தம்.

மகா கவி ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் இந்த கீதத்தை எழுதினார். தேசிய கீதத்தை பள்ளிகளில் குறிப்பிட்ட சில நாள்களில் மட்டுமே பாடுகின்றனர். மற்ற நாள்களில், தனியார் பள்ளிக்கூடமாக இருந்தால் அந்தப் பள்ளி எந்த மதத்தைச் சார்ந்துள்ளதோ அந்த மதம் குறித்த பாடல்களையே மாணவர்கள் பாடுகின்றனர்.

தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் குறிப்பிட்ட சில நாள்கள் - சுதந்திர தினம், குடியரசு தினம், விளையாட்டு தினம் - போன்ற நாள்களில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாடுகின்றனர் (இதிலும் பல பள்ளிகளில் ஒலிப்பேழையின் மூலமே இசைக்கப்படுகிறது). மற்ற நாள்களில் வாயைத் திறந்து யாரும் பாடுவது கிடையாது.

தேசிய கீதம் என்றால் ""ஜன கண மன'' என்று கண்ணை மூடிக் கொண்டு பாடும் மாணவ, மாணவிகள், இந்தப் பாடலுக்கான அர்த்தம் என்ன என்று தெரியாமலேயே பாடுகின்றனர். கேட்டால், "வங்கக் கவிஞர் எழுதிய பாடலுக்கு நமக்கு எப்படி அர்த்தம் தெரியும்?' என்றும், "தெரிந்து நான் செய்யப் போகிறேன்?' என்றும் கேட்கின்றனர். இதில் பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை. இது மிகவும் வருத்தத்துக்குரியது.

தமிழ்ப் புத்தகத்தில் தேசிய கீதத்துக்கான அர்த்தமும் பாடலுக்குக் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் படித்தால்தானே? மதிப்பெண் என்ற அளவுகோலைப் பெற, குதிரைக்குக் கடிவாளம் பூட்டியதுபோல மாணவர்கள் புத்தகத்திலுள்ள முதல் பாடம் தொடங்கி கடைசி பாடம் வரை மனப்பாடம் செய்ய வைக்கப்படுகின்றனர். ஆனால், அதே புத்தகத்தில் பாடங்களுக்கு முன் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களும், அதற்கான அர்த்தங்களும் உள்ளன என்பது மாணவர்களுக்குத் தெரியாமல் போனது ஏனோ?

தினமுமோ அல்லது வாரம் ஒரு முறையோ தேசிய கீதத்தைப் பாடினால் எந்தப் பயனும் இல்லை. பள்ளி, கல்லூரிகளில் தேசிய கீதத்தைப் பாடுவது ஒரு கடமையாக உள்ளது. அந்தப் பாடலின் அர்த்தத்தை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான், தாய்த் திருநாட்டின் பெருமை குறித்து இளைய சமுதாயம் அறிய முடியும்.

""இந்தியா எனது தாய் நாடு. இந்தியர் அனைவரும் எனது உடன்பிறப்புகள்; எனது நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன்'' என்னும் உறுதி மொழியை மாணவ, மாணவிகள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளே இந்தியாவின் வருங்காலத் தூண்கள். அவர்களின் மனதில் ஆரம்பத்திலேயே நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலச் சந்ததியினர் இணக்கமான சூழலில் வாழ முடியும்.

தேசிய கீதத்தையும், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பற்றிய ஆவணப்படத்தையும் மீண்டும் திரையரங்குகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையில் திரையிட வேண்டும். அப்போதுதான் இளைய தலைமுறையினர் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப்பற்றித் தெரிந்து கொள்வார்கள்.

தேசியக்கொடி சில துளிகள் !

தேசியக்கொடி சில துளிகள் !

நமது தேசியக் கொடி உருவாக்கத்தில் பலரின் பங்களிப்பு இருக்கிறது. மேடம் காமா எனப்படும் பைக்காஜி காமா, வீர சாவர்க்கர், விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா போன்றோரும் ஆரம்ப கால தேசியக் கொடியை வடிவமைத்திருக்கிறார்கள்.

1907 ஆகஸ்ட் மாதம், ஜெர்மனியில் நடந்த ஒரு மாநாட்டில், இந்தியாவுக்கான தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

1917-ஆம் ஆண்டு, பாலகங்காதர திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து, 'சுயாட்சிப் போராட்டம்’ தொடங்கினர். அப்போது, அவர்கள் வடிவமைத்த தேசியக் கொடியின், இடது ஓரத்தில், பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இருந்தது. இதை, இந்திய சுதந்திரப் போராளிகள் பலரும் எதிர்த்ததால், விரைவிலேயே திரும்பப் பெறப்பட்டது.

தற்போதுள்ள தேசியக் கொடிக்கு ஆரம்பமாக அமைந்தது, 1921-ல் பிங்காலி வெங்கையா என்பவர் உருவாக்கிய கொடி. இதில் பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டுமே இருந்தன. இது, இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டது.

மதத்தைக் குறிப்பிடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது தேசியக் கொடியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1931-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சிவப்பு, பச்சை நிறங்களுக்கு இடையில் வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டது. நூல் நூற்கும் கை ராட்டையும் இணைந்தது. ராட்டையின் சக்கரங்கள், நமது தேசிய முன்னேற்றத்தைக் குறிப்பிட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும், 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, மூவர்ண தேசியக் கொடி வான் நோக்கி கம்பீரமாக உயர்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் கொடியும் தேசியக் கொடியும் ஒரே மாதிரியாக இல்லாமல், வேறுபடுத்திக் காட்டுவதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, சரோஜினி நாயுடு, அம்பேத்கர் போன்றோர் அடங்கிய அந்தக் குழு, 1947 ஜூலை மாதம், தேசியக் கொடியை இறுதி செய்தது. கை ராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது.

1951-ல், இந்திய தரக் கட்டுப்பாட்டுத் துறையால், கொடியின் நீளம் மற்றும் அகலம், தயாரிக்கப் பயன்படுத்தும் துணியின் தரம் போன்ற பல விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டன.

நமது நாட்டுக் கொடியைத் தயாரிக்க, குடிசைத் தொழில் கழகம் உரிமை பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டிலிருந்து, கர்நாடகா தார்வாடியில் உள்ள 'கதர் கிராமத் யோக சமுக்தா சங்கம்’ மூலம் தேசியக் கொடி தயாரிக்கப்படுகிறது.

தற்போதைய தேசியக் கொடியின் பொருள்... காவி நிறம், தைரியம் மற்றும் தியாகத்தைக் குறிக்கும். வெள்ளை நிறம், உண்மை மற்றும் தூய்மையைக் குறிக்கும். பச்சை நிறம், வளத்தைக் குறிக்கும். அசோகச் சக்கரம், நேர்மையைக் குறிக்கிறது.