Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 8 September 2014

தமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்

தமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்: கற்பித்தலில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 'இத்தகைய குறைபாடுகளை களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் நிலையில், 28 ஆயிரத்து 591 துவக்க மற்றும் 9,259 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்திறன், மொழி உச்சரிப்பு, பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதம் ஆகியவற்றை கண்காணிக்க, கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில், மாவட்டந்தோறும் உள்ள கல்வி அதிகாரிகளின் சார்பில், ஆய்வுப்பணிகள் நடந்தன.இதில், பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில், மாணவர்கள் மொழி உச்சரிப்பில் தடுமாறுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, நடுநிலைப்பள்ளி மாணவர்களே தமிழ்ப்பாட உரைநடைப்பகுதியில், பத்திகளை முழுமையாக வாசிப்பதற்கு கூட சிரமப்பட்டுள்ளனர்.

ஆங்கிலப்பாட புத்தகத்தில் பெரும்பாலான வார்த்தைகளின் பொருள், உச்சரிக்கும் விதம் தெரிவதில்லை.'இது தொடர்ந்தால், உயர்கல்வியில் மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறுவதற்கே பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, மலைப்பகுதி பள்ளிகளில், மாணவர்களது கல்வித்தரம் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மேம்படுத்த, வகுப்பாசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ''கிராமப்புற பள்ளிகளில் படித்து, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், ஆங்கிலப்பாட அறிவு குறைபாடால், உயர்கல்வியில் சராசரி மதிப்பெண்கள் பெறுவதற்கு கூட திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது.''மொழிப்பாட அறிவில்லா மாணவர்களால், உயர்கல்வியில் முத்திரை பதிக்க முடியாது.

தமிழ் வழியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், உயர்கல்வி முடித்ததும், மொழி அறிவு குறைபாடால், செய்தித்தாள் வாசிப்பதில் கூட திணறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முரண்பாடு களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.''எழுத்துகள் அமைவிடம், உச்சரிப்பு, பொருள் குறித்து படங்கள் வாயிலாக,தெளிவுபட விளக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் மூலம், மாணவர்களின் மொழிப்பாடஅறிவை அதிகப்படுத்த முடியும்," என்றார்.

தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்:

தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: சென்னையில் 29ம் தேதி நடக்கிறது
              ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை  அமல்படுத்தக்கோரி சென்னையில் வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த  பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.

                       தஞ்சையில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர  ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர்  சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார்.  வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு  முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வை  நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடி உள்ளன. இதனால் பல  ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர்  பணிபெற முடியாமல் உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் பயிற்சியை  பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே பல  பள்ளிகளில் ஆசிரியர்களின்றி உள்ளதால் மாணவர்களின் கல்வி தரம்  பாதிப்புக்குள்ளாகிள்ளது. இதை முதல் வர் பரிசீலனை செய்து யாருக்கும்  பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பழைய நடைமுறையில் பதிவுமூப்பு  முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
                    2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில்  நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள 6,000 பட்டதாரி  ஆசிரியர்களுக்கும், 2012ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி சான்றிதழ்  சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள  700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்.  இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில்  உண்ணாவிரத போராட்டம் நடத்தப் படும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

3ம் ஊக்க ஊதியம் for M.Phil.

3ம் ஊக்க ஊதியம் for M.Phil.
            உயர்படிப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தராத கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க கல்வி அதிகாரிக்கு கெடு விதித்துள்ளது.
              வேதாரண்யத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் டி.ராமசாமி. இவர் சார்பாக வக்கீல் காசிநாத பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு  வழக்கில் கூறியிருப்பதாவது:
           மனுதாரர் ராமசாமி வேதாரண்யம்  நடுநிலை பள்ளியில்  தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் 2010ம் ஆண்டு பிஏ பிட் முடித்தார்.  இதற்காக அவருக்கு  முதல் ஊக்க ஊதிய உயர்வு தரப்பட்டது.  அதன்பிறகு எம்ஏ முடித்ததற்காக இரண்டாம் ஊக்க ஊதியம் தரப்பட்டது. 2009ல் எம்பில் பட்டம் படித்து முடித்தார். இதற்கு 3ம் ஊக்க ஊதிய உயர்வு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து 3ம் ஊக்க ஊதியம் தர உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரிகள் அமல்ப டுத்தவில்லை.
எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி ஆஜராகி, ஏற்கனவே அதிகம் படித்த ஆசிரியர்களுக்கு 3ம், 4ம் ஊக்க ஊதியம் தரப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை கூறியது. எனவே மனுதாரருக்கு 3ம் ஊக்க ஊதியம் தர வேண்டும் என்றார்.இதை நீதிபதி சுப்பையா விசாரித்து, 2 வாரத்தில் தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தரவேண்டும் என்று உத்தரவிட்டார். இதை கல்வித்துறை செயலாளர் அமல்படுத்தி நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இடைத்தேர்தல் குறுக்கீடு; இரண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

இடைத்தேர்தல் குறுக்கீடு; இரண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
           உள்ளாட்சி இடைத்தேர்தல் குறுக்கிட்டதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வில் இரண்டு பாடங்களுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

             கடந்த மாத இறுதியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை, பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. பிளஸ் 2 காலாண்டு செப்., 15ம் தேதி தமிழ் முதல் தாளுடன் துவங்கி, 16ம் தேதி - தமிழ் 2ம் தாள் , 17ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 18ம் தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. மற்ற பாடங்களுக்கான தேர்வு, 26ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. வரும் 17, 18ம் தேதிகளில் நடப்பதாக இருந்த ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் பாடங்களுக்கான தேர்வு, அக்., 7 மற்றும் 8 தேதிகளுக்கு மாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

                பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு, வரும் 17ம் தேதி தமிழ் முதல் தாளுடன் துவங்கி, 18ம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வு என்றும், ஆங்கிலம் உள்ளிட்ட இதர பாடங்களுக்கு வரும் 25ம் தேதி வரை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இதில், வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடப்பதாக இருந்த தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு, அக்., 7 மற்றும் 8க்கு மாற்றப்பட்டு, பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஏற்கனவே திட்டமிட்டபடி, காலாண்டு தேர்வு துவங்கும்; இடைத்தேர்தல் நடைபெறுவதால், 17, 18ம் தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகள் மட்டும், விடுமுறைக்குபின் நடத்தப்படும். ஏனெனில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பல பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அதனால், அவ்விரண்டு நாட்களில் நடைபெற உள்ள தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இன்று உலக எழுத்தறிவு தினம்!

இன்று உலக எழுத்தறிவு தினம்!
"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்'' : -இன்று உலக எழுத்தறிவு தினம்
         ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். ஆண்டு முழுவதும் கற்றுக்கொள்வதற்கு எழுத்தறிவு அடிப்படை. இது சமூகத்தில் அமைதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பட உதவுகிறது.

      உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "எழுத்தறிவு மற்றும் நிலையான வளர்ச்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. இது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். எழுத்தறிவு பெறுவது "ஒருவரின் கடமை; கட்டாயம்'.

என்ன பயன் :

எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இருதயம். எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர். உலகளவில் 15 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கையில், 77 கோடியே 40 லட்சம் பேரும், 15 - 24 வயதுக்குட்பட்டவர்களில் 12 கோடியே 30 லட்சம் பேரும் எழுத்தறிவு அற்றவர்கள். எழுத்தறிவு பெறாதவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் பெண்கள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்.

இந்தியாவின் நிலை:

2011ன் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001 கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.33 சதவீதமாக உள்ளது. இது 2001ஐ விட 6.9 சதவீதம் அதிகம். 100 சதவீத எழுத்தறிவு என்பதை நோக்கி முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

திரிபுரா முதலிடம் :

எழுத்தறிவு சதவீதத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் திரிபுரா உள்ளது. இப்பட்டியலில் தமிழகம் (80.33) 14வது இடத்தில் உள்ளது. பீகார் (63.82) கடைசி இடத்தில் உள்ளது.

மாநிலம்சதவீதம்

1. திரிபுரா94.65
2. கேரளா93.91
3. லட்சத்தீவு92.28
4. மிசோரம்91.58
5. கோவா87.40