Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 26 October 2014

பிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு :

பிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு : பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு
              பிளஸ் 2 படிக்காமல், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியரை,  பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்காமல் தடை போட்ட தமிழக அரசு, தற்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 'இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி, பிளஸ் 2 படிப்பிற்கு நிகரானது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.

                 இதனால், பிளஸ் 2 படிக்காத இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக, பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 1987 வரை, இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தது. 1988 முதல், ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான கல்வி தகுதியாக, பிளஸ் 2 நிர்ணயிக்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்சி படிப்பு : பிளஸ் 2 கல்வித்தகுதி நிர்ணயிப்பதற்கு முன், பிளஸ் 2 படிக்காமல், 10ம் வகுப்பு, பின், ஆசிரியர் பயிற்சி படிப்பு, அதன்பின், திறந்தவெளி பல்கலையில் பட்டம், முதுகலை பட்டம் பெற்று, பள்ளி கல்வித்துறையில், ஆசிரியராக ஏராளமானோர், பணியில் சேர்ந்தனர். இத்தகைய ஆசிரியர்கள், பிளஸ் 2 முடிக்காததால், பதவி உயர்வு வழங்க முடியாது என, 2011ல், கல்வித்துறை, திட்டவட்டமாக தெரிவித்தது. 2011க்குப் பின் நடந்த பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில், மேற்கண்ட ஆசிரியரை, சேர்க்கவில்லை. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல ஆசிரியர்கள், வழக்கு தொடர்ந்தனர். இதில், ஆசிரியர்களுக்கு, சாதகமாக, சமீபத்தில், உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:
நீதிமன்றம் உத்தரவு :
'பத்தாம் வகுப்பிற்குப் பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருதி, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருதி, உரிய ஆணை வழங்கிட, பள்ளிக்கல்வி இயக்குனர்
கேட்டுள்ளார். அதன்படி, 1987ம் ஆண்டுக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையானது என, அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு, அரசாணையில், செயலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் காரணமாக, பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையில், இடைநிலை ஆசிரியராக பணி புரியும் பலர், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

கால்நடைத்துறையில் ஆய்வாளர்

கால்நடைத்துறையில் ஆய்வாளர் காலியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை.
          விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கால்நடை ஆய்வாளர் கிரேடு-2 பணிக்காலியிடத்திற்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.     இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துணை இயக்குநரால் (பணியாளர்) கால்நடை ஆய்வாளர் கிரேடு-2 பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

             இப்பணியிடத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.       இப்பணிக்கு பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 1.7.2013 அன்றைய நாளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினருக்கு 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதற்கான பதிவு மூப்பு விவரம் வருமாறு:      முன்னுரிமை பிரிவு(ஆதரவற்ற விதவை மட்டும்): எஸ்.டி-அனைத்து பதிவுதாரர்களும், எஸ்.சி.எ-29.8.2012, எஸ்.சி-9.6.1999, எம்.பி.சி-14.3.2001, பி.சி.எம்-19.1.2009, பி.சி-23.6.1999, இதர பிரிவினர்-4.9.2000 வரையிலும்.     மாற்றுத்திறனாளிகள்(இருபாலர்): எஸ்.டி-25.6.1997, எஸ்.சி.எ-3.6.1992, எஸ்.சி-8.6.1989, எம்.பி.சி-30.7.1990, பி.சி.எம்-27.5.1991, பி.சி-6.1.1990, பொது பிரிவு- 24.5.1990 வரையிலும்.   மாற்றுத்திறனாளிகள்(செவித்திறனில்லாதோர் மட்டும்): எஸ்.சி-27.10.1993, எம்.பி.சி-16.9.1993, பி.சி-31.5.1990, இதர பிரிவினர்-17.2.1992 வரையிலும்.     முன்னுரிமையற்றோர்(இருபாலர்): எஸ்.டி-28.6.1996, எஸ்.சி.எ-6.3.1996, எஸ்.சி-6.4.1996, எம்.பி.சி-17.6.1998, பி.சி.எம்-20.7.1998, பி.சி-12.6.1998, இதர பிரிவினர்-30.5.1996 வரையில் பதிவு மூப்பு இருக்க வேண்டும்.

                      எனவே மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்புடையவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 27-ம் தேதி நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.