Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 14 November 2014

+2 மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

+2 மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு பின், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள், இன்று காலை, இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடந்தது. இதன் முடிவிற்குப் பின், ஏராளமான மாணவ, மாணவியர், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கேட்டு, தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்தனர். மறு மதிப்பீடு, மறுகூட்டல் பணி முடிந்ததை அடுத்து, மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண், www.student.hse14rtrv.in என்ற இணையதளத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும், வரும், 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு, சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராகி, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்

ஆதார் அட்டை பதிவுக்கு 469 நிரந்தர முகாம்கள்

ஆதார் அட்டை பதிவுக்கு 469 நிரந்தர முகாம்கள்
தமிழகத்தில் ஆதார் அட்டைக்கான பயோ-மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யும் நிரந்தர முகாம்கள் அனைத்தையும் சனிக்கிழமைக்குள் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஆதார் அட்டைக்கான பயோ-மெட்ரிக் பதிவு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. பின்னர் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பணி மந்தமாகியது. இந்த நிலையில் மீண்டும் ஆதார் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்ததையடுத்து இப்போது மீண்டும் பயோ-மெட்ரிக் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் கூறியது: சில காரணங்களால் பயோ-மெட்ரிக் பதிவு செய்யும் பணி மந்தமாக இருந்தது. இப்போது கடவுச்சீட்டு, குடும்ப அட்டை போன்ற அத்தியாவசிய ஆவணங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனால் மீண்டும் ஆதார் அட்டை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பயோ-மெட்ரிக் பதிவு செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சில மாவட்டங்களில் மட்டுமே இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் பதிவு செய்ய நிரந்தர முகாம்கள் அமைக்கும் பணி நடக்கின்றன. நவம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 268 இடங்களில் நிரந்தர முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சியாக இருந்தால் மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 469 நிரந்தர முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில்...: சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை 50 இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் 18 முகாம்கள் அமைக்கும் பணி நிறைவுபெற்று செயல்பாட்டில் உள்ளன. அவை மண்டல அலுவலகங்கள், யூனிட் அலுவலகங்கள் (4-5 வார்டுகள் சேர்ந்த அலுவலகம்) ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன. வரும் சனிக்கிழமைக்குள் தமிழகம் முழுவதும் அனைத்து நிரந்தர முகாம்களும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

முன்னர் செயல்பாட்டில் இருந்த தாற்காலிக முகாம்களில், பயோ-மெட்ரிக் பதிவுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சென்னைக்கு முதலில் அனுப்பி வைக்கப்படும். பின்னர் விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் கணினியில் பதிவேற்றப்பட்டு, அதன் பின்னர் மீண்டும் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு அனுப்பப்படும். அதன் பின்னரே விண்ணப்பதாரரிடம் பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படும்.

ஆனால் நிரந்தர முகாம்களில் விண்ணப்பம் பெறும் மையத்திலேயே தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதனால் ஓரிரு நாள்களில் பொதுமக்கள் பயோ-மெட்ரிக் பதிவு செய்து கொள்ளலாம். இதனால் கால விரயம் குறையும்.

4.5 கோடி பேருக்கு அட்டைகள்: தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 8 ஆயிரத்து 18 பேரின் பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 4 கோடியே 67 லட்சம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் 25.94 லட்சம் பேரிடம் பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது 62.47 சதவீதமாகும்.

80 சதவீதத்துக்கு மேல் பணி முடிந்த மாவட்டங்கள்:

மாவட்டம் சதவீதம்

பெரம்பலூர் 89.23

ராமநாதபுரம் 85.65

அரியலூர் 85.56

திருச்சி 81.61

நாகப்பட்டினம் 81.54

கறுப்பு, நீலம் மை பயன்படுத்த உத்தரவு அலுவலக கோப்புகளில் குறிப்புகள்,

கறுப்பு, நீலம் மை பயன்படுத்த உத்தரவு
அலுவலக கோப்புகளில் குறிப்புகள், தகவல்கள் எழுதும் போது, கறுப்பு அல்லது நீல நிற மையை பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னர், இணை செயலர்கள் மற்றும் அதற்கு மேலான அதிகாரிகள் மட்டும், பச்சை நிற மையை பயன்படுத்தி கையெழுத்திட அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது போல, அரசின் பிற துறைகளுடனான தொடர்புக்கு, தந்தியை பயன்படுத்த வேண்டாம் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது. நாட்டில், 163 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த தந்தி, கடந்த ஆண்டு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி மகளி்ர் மேம்பாடு குழு நிர்வாக ஆணையராக அமுதவள்ளி நியமி்க்கப்பட்டுள்ளார். மேலும் கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்து வந்த கணேஷ் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாடநூல் கழக நிர்வாக இயக்குனராகக மைதிலி கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமி்ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு உறுப்பினர் செயலராக சாம்புவேல் கலோலிகர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மின் நிதிநிறுவனம் கட்டமைப்பு மேம்பாட்டுகழக மேலான் இயக்குனராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி அறிவுறுத்தல்

பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி அறிவுறுத்தல்
அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் பல்கலைக்கழகங்கள் நிரப்பியாக வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தலைவர் வேத் பிரகாஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:பல பல்கலைக்கழகங்களில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், இவற்றில் சில அந்தக் காலியிடங்களில் பகுதி நேர அடிப்படையில் தாற்காலிகப் பேராசிரியர்கள் நியமித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள், தாங்கள் நிரந்தர பேராசிரியர்கள் இல்லை என்பதால் ஒதுக்கப்பட்ட பாடத்தை மட்டும் நடத்திவிட்டுச் செல்வதையே வழக்கமாகக் கொள்வர்.

துறை ரீதியாக தங்களைத் தாங்களே சுய மேம்பாடு செய்துகொள்வதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே, தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் சற்றும் தாமதிக்காமல் பத்திரிகை விளம்பரம் முலமும், பல்கலைக்கழக இணையதளத்தின் மூலமாகவும் விளம்பரப்படுத்தி காலிப் பணியிடங்கள் அனைத்தையும் உரிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில், தகுதிவாய்ந்த முழுநேரப் பேராசிரியர்களைக் கொண்டு பல்கலைக்கழகங்கள் நிரப்ப வேண்டும் என்றார்.

‘முதல்வர் கணினி தமிழ் விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

‘முதல்வர் கணினி தமிழ் விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

'முதல்வர் கணினி தமிழ் விருது' பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம், ’முதல்வர் கணினி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
விருது தொகை, 1லட்சம் ரூபாயுடன், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இவ்வகையில், 2014ம் ஆண்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போட்டிக்குரிய மென்பொருள்கள், 2011, 2012, 2013க்குள், தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, தமிழ் வளர்ச்சித் துறை வலை தளத்தில் ( www.tamilvalarchithurai.org ) இலவசமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்கத்திற்கு, டிச., 31ம் தேதிக்குள், ’தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413, ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா?

மதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா?
இன்றைய சமுதாயச் சூழலில் ஒரு மாணவன் நல்லவனாக வாழ மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
கம்ப்யூட்டர், மொபைல் போன், 'டிவி', வன்முறை, ஆபாச படங்கள், அரசு பார்களை சந்தித்து முட்டி மோதி எழும்புவதற்குள், அவன் வாழ்நாளில் பாதிதுாரம் கடந்து விடுகிறான்.தன்நிலை உணர்ந்து நல்லவனாக முயற்சிக்கும் போது அவன் எதிர்பார்க்கும் அங்கீகாரம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கிடைக்காமல் போகிறது. பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை ஆகிய சமூகக் கொடுமைகளைச் செய்யும் இளைஞர்கள் 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகைய செயல்களில் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள் வழிதவறியதற்கு யார் காரணம்?
படிக்கும் வயதில் கவனம் :

சிதறுகிறது எனில் கல்வித்திட்டம் அவனை நல்வழிக்கு ஒருமுகப்படுத்த தவறிவிட்டது என்பது மறுக்க இயலாத உண்மை. பொருளாதார ரீதியாக அவன் வாழ கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தபோதிலும், நல்லெண்ணங்களே அவனின் கல்வித்தகுதிக்கும் வித்தாக உள்ளது என்பதை இன்றையக் கல்வி அளிக்கத் தவறி விட்டது.மதிப்பெண் ரீதியிலான தேர்வுகள் ஒன்றே ஒருவனின் கல்வித்தகுதிக்குச் சான்றாகிறது. 'சமுதாய விலங்கு' என அழைக்கப்படும் மனிதன் தான் வாழும் சமுதாயத்திற்கு தன்னைத் தகுந்தவனாக்கிக் கொள்ள என்ன தகுதிகளை வளர்க்கிறது அல்லது அளிக்கிறது
இன்றைய கல்வித் திட்டம்?

இன்றைய மாணவ சமுதாயம் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாணவர்கள் சுயகவுரவத்திற்கு பெரும் மதிப்பு கொடுக்கிறார்கள். தான், தனது என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழும் சமுதாயச் சூழல் வளர்ந்து கொண்டிருக்கிறது. சகிப்புத்தன்மை எனபது சிறிதும் இல்லாத காரணத்தால் பிறரின் உணர்வுகள், வலிகள் மிதிபட்டு போகிறது. விளைவுகளை யோசிக்காத மனிதநேயமில்லாச் செயல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. தான் செய்த தவறுகளுக்கான குற்றஉணர்வே இல்லாத மாணவச்சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது எனில் அவனுக்கு இந்த மனவலிமை உருவாக்கியதற்கு யாரை காரணம் காட்டப் போகிறோம்?
நம் கல்வித்திட்டம் :

மூன்று வயது வரை குடும்பத்தில் நல் அரவணைப்போடு வாழ்ந்த குழந்தை, பள்ளிக்குச் சென்றபின் அவன் கற்கும் சூழலே அவனின் ஆளுமைப் பண்புகளை உருவாக்குகிறது. அரசு திட்டப்படி அவன் ஐந்து பாடங்களை வாரத்தில் 40க்கு 30 பாடவேளை களில் கற்றுக் கொள்கிறான். மதிப்பீட்டுக் கல்வி, உடற்கல்வி, யோகா போன்ற பாடங்களுக்கு வாரத்தில் ஒருநாள் மற்றும் இரண்டு நாட்கள் மட்டுமே தரப்படுகிறது. பாடங்களை அவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் யாரும் இடைநிற்றலோ படிப்பறிவு இல்லாமலோ இல்லை என்று உலகநாடுகளுக்கு சதவீதம் காட்ட வேண்டும். அனைவருக்கும் தேர்ச்சி என்கிற பட்சத்தில் பாடங்களுக்கு எதற்காக அதிக நேரங்களை ஒதுக்கி மதிப்பெண் ரீதியிலான கல்வியை அளிக்க வேண்டும்?நல் மதிப்பீடு, வாழ்க்கை மதிப்பீட்டில்லா கல்வியால் என்ன பயன்? எட்டாம் வகுப்பு வரை பாடங்களைக் குறைத்துக் கொண்டு மாணவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கல்வித் திட்டத்தை உருவாக்கலாமே. ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி, யோகா, தற்காப்புப் பயிற்சி, நல்மதிப்பீட்டுக் கல்வியை மூன்று வயது முதல் 13 வயது வரை நாம் அளிக்கும் போது, அவன் மனிதனாக வாழக்கூடிய தகுதிகளைக் கற்றுத் தருகிறோம். ஆர்வமுடன் மாணவன் பள்ளியில் கல்வி கற்கும் சூழலையும் உருவாக்குகிறோம். நம் கல்வித் திட்டத்தின் படி மதிப்பெண் பெற்றெடுத்த குழந்தைகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த 10 சதவீத மதிப்பெண் குழந்தைகள் தான் பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குச் செல்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் மதிப்பெண் எடுக்கத் தவறி விடுகின்றனர். நாமும் நல்மதிப்பீட்டுக் கல்வியை அளிக்கத் தவறி விடுகிறோம். இவையிரண்டும் சேர்ந்து சமுதாய சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
மேலை நாடுகளின் கல்வித் திட்டம்

:நாளைய சமுதாயம் மனிதன் வாழக்கூடிய சமுதாயமாக அமைய வேண்டுமெனில் நம் கல்வித் திட்டத்தில் சீரிய மாற்றங்களை மிக விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும். மேலைநாடுகளில் பள்ளிப்பருவம் முடிந்து கல்லுாரியில் அடியெடுத்து வைக்கும் முன் பல தகுதிச் சான்றிதழ்களை அடிப்படை தகுதிகளாக அவன் பெற்றிருக்க வேண்டும்.
*முதியோர் மற்றும் கருணை இல்லங்களில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய சான்றிதழ்கள்.
* ஆறு மாதம் அல்லது ஓராண்டு காலம் பிற கண்டங்களில் எந்த நாட்டிலாவது தன்னார்வத் தொண்டு செய்ததற்கான சான்றிதழ்.
*குறிப்பிட்ட எண்களில் ஆய்வுக் கட்டுரைகள், ஒப்படைப்புகள்.
*சமுதாய நலன் பயக்கும் திட்டங்களில் பங்கேற்ற சான்றிதழ்.
*தன் தனிப்பட்ட திறமைகளை வளர்த்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்.
இவையனைத்திற்கும் புள்ளிகள் ரீதியிலான மதிப்பீடுகளை அளிக்கின்றனர். இதனுடன் அவன் படித்த கல்வி மதிப்பெண்களும் இணைக்கப்படுகிறது. இப்படி பல வகையிலும் மாணவனை சமுதாய நலத்திட்டங்களில் ஊக்குவிக்கும் வண்ணம் செயல்முறை பயிற்சிகளை வகுத்துள்ளனர். படிக்கும் காலத்தில் தவறான பாதையின் பக்கம் போகாதவாறு நல்வழியில் திசை திருப்புகின்றனர்.இத்தகைய கல்வித் திட்டங்கள் நம் நாட்டிற்குத் தேவையாக இருக்கும் பட்சத்தில் ஏன் இத்தகைய செயல்முறை பயிற்சிகளை ஊக்குவிக்கக் கூடாது? ஜாதி மற்றும் மதிப்பெண் ரீதியிலான ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பலன் தரும் மதிப்பீட்டுக் கல்வி :

மாணவன் வாழும் சமுதாயச் சூழலுக்கேற்ப நல் மதிப்பீட்டுக் கல்வியை வரையறுக்கலாமே. கிராம சுகாதார திட்டங்கள், பசுமை புரட்சி திட்டம், விழிப்புணர்வு செயல்பாடு, மாசு கட்டுப்பாடு, நுாலகங்களில் பணியாற்றும் வாய்ப்பு, சாலை பாதுகாப்பு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லங்களில் பணியாற்றும் வாய்ப்பு, தற்காப்புப் பயிற்சி, பொது இடங்களை துாய்மை செய்தல், உடற்பயிற்சி, யோகா பயிற்சி, படிக்கும் காலத்தில் உழைத்து வேலை செய்தல்.இதுபோன்ற திட்டங்களில் மாணவனை பங்கேற்கச் செய்யும் போது அவன் மனிதநேயத்தோடு சமூகத்தை நேசிக்கக் கற்றுக் கொள்கிறான். சட்ட திட்டங்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறான். சமுதாய நலனுக்காக முயற்சி எடுக்கும் சமூகத் தொண்டனாகும் வாய்ப்புகளைப் பெறுகிறான். தன்னம்பிக்கையோடு ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுகிறான்.
இச்செயல்பாடுகளை மாணவச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றோம்.

கல்வியாளர்கள் உள்பட 1.65 லட்சம் பேருக்கு பள்ளி நிர்வாக மேலாண்மைப் பயிற்சி

கல்வியாளர்கள் உள்பட 1.65 லட்சம் பேருக்கு பள்ளி நிர்வாக மேலாண்மைப் பயிற்சி

பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்பாக பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக்குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளை நிர்வகிக்க ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஒவ்வொரு குழுவிலும் 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பள்ளிகளின் தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளிகளை எவ்வாறு மேம்படுத்துவது, ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்வது, வகுப்பறை, கழிவறை வசதிகளை மேம்படுத்துவது, பள்ளிகளில் விழாக்களை நடத்துவது, கல்வித் தரத்தை அதிகரிக்க உள்ளூரில் உள்ள பட்டதாரிகளைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் எடுக்கச் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மாநில அளவில் முதல் கட்டமாக நவம்பர் 14-ஆம் தேதி மதுரையிலும், இரண்டாம் கட்டமாக சென்னையில் நவம்பர் 18-ஆம் தேதியிலும் பயிற்சிவழங்கப்பட உள்ளது.அதன் பிறகு, மாவட்டந்தோறும் இந்தக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.இந்தப் பயிற்சியின்போது பள்ளியை நிர்வகிப்பது தொடர்பான கையேடுகளும்அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.வரும் ஆண்டுகளில் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்எட் நுழைவுத் தேர்வு: ஆன்லைனில் வெளியீடு.

எம்எட் நுழைவுத் தேர்வு: ஆன்லைனில் வெளியீடு.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ)தொலைதூரக்கல்வி மூலமாக எம்.எட். படிப்பை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு எம்எட் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில, நுழைவுத்தேர்வு முடிவினை இக்னோ வெளிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.