Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 31 October 2015

மூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும்'ஓகே!'

மூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும்'ஓகே!'
'மூன்று ஆண்டு சட்டப் படிப்பு ரத்து; பார் கவுன்சில் பொறுப்பை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம்தடை விதித்துள்ளது.

குற்றப் பின்னணி உடையவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில்,ஆனந்த முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:கிரிமினல்கள்,வழக்கு நிலுவை யில் உள்ளவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதைத் தடுக்கும் விதத்தில், வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் அல்லதுபுதிய சட்டப் பிரிவை கொண்டு வர, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.இந்திய பார் கவுன்சில் செயல்பாடுகளை, ஆறு மாதங்களுக்குள், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை மற்றும் இடங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதுடன், மூன்று ஆண்டு சட்டப் படிப்பை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், இந்திய பார் கவுன்சில் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவில், 'குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க, பார் கவுன்சிலுக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை. இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது' என, கூறப்பட்டது.மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. பார் கவுன்சில் சார்பில், அதன் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, இணைதலைவர் எஸ்.பிரபாகரன் ஆஜராகினர். 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:'பார் கவுன்சிலின் செயல்பாடு களை, ஓய்வு பெற்ற நீதிபதிதலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்; சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை, இடங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; மூன்று ஆண்டு சட்டப் படிப்பை ரத்து செய்ய வேண்டும்.

'வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை வாபஸ் பெற வேண்டும்' ஆகிய உத்தரவுகளுக்கு, தடை விதிக்கப்படுகிறது.தனி நீதிபதியின் உத்தரவில் சில, பரிந்துரைகளாக உள்ளன. அதை, பார் கவுன்சில் ஆராய வேண்டும். அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கு, சட்டப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க வேண்டாம் என,மாநில அரசுகளுக்கு, பார் கவுன்சில் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது.மேல்முறையீட்டு மனு,விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. மனுவுக்கு, சம்பந்தப்பட்டவர்கள்பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்'உத்தரவிட்டுள்ளது.

அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்!

அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்!
மாணவர்கள் சிந்தித்து, பதில் அளிக்கும் வகையில், அறிவியல் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார். கரூர், புலியூர் செட்டிநாடு பொறியல் கல்லூரியில், தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது.

பள்ளிக்கல்வித்துறைஇயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:அரசுப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. அறிவியல் பாடத்தில் சி.பி.எஸ்.இ., பாடத்தைப் போல மாணவர்கள் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. சொல்யூசன் புத்தகம் தயாராகி வருகிறது. தலைமையாசிரியர்கள் இதுபற்றி அறிவியல் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.மதிப்பெண் மட்டுமே பிரதானம் அல்ல. மதிப்பெண் அதிகம் பெற வைப்பதோடு, சமுதாயத்தை சிறப்பாக உருவாக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியின் பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். விஷன் திட்டத்தில் தொழில்துறைக்கு அடுத்தபடியாக கல்வித்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மழலையர் பள்ளிகளுக்கு புதிய விதிமுறை வெளியிட உத்தரவு

மழலையர் பள்ளிகளுக்கு புதிய விதிமுறை வெளியிட உத்தரவு
தமிழகத்தில், அனுமதியின்றி, 700 மழலையர் பள்ளிகள் இயங்குவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, புதிய விதிமுறைகளை வகுத்து, நகல் அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சில அம்சங்களுக்கு, பள்ளிகள் தரப்பில் ஆட்சேபனைதெரிவிக்கப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நகல் விதிமுறைகளை, நாங்கள் பரிசீலித்தோம். விதிமுறைகளை வகுப்பதற்கு, அரசு எடுத்த முயற்சிகளை பாராட்டுகிறோம். பள்ளிகள் தரப்பில், சில விஷயங்களுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.'மழலையர் பள்ளிகள், தரை தளத்தில் தான் இயங்க வேண்டும்' என, கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்பதை, எங்களால் ஏற்க முடியவில்லை. அதேபோல், ஐந்து ஆண்டுகுத்தகை காலத்தை, மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பதற்கும், எந்த காரணமும் இல்லை.இரண்டு விஷயங்களில், சிறிதளவு திருத்தங்கள் தேவைப்படுகிறது. 'மழலையர் பள்ளிகள், மூன்று மணி நேரத்துக்கு மேல் இயங்க கூடாது' என, விதிகளில் கூறப்பட்டுள்ளது.அதற்கு காரணம், பள்ளியில், மூன்றுமணி நேரத்துக்கும் மேல், குழந்தைகள் இருக்க கூடாது என்பதற்காக தான். இதில், தகுந்த திருத்தத்தை மேற்கொள்ளலாம். வெவ்வேறு மாணவர்களை கொண்டு, கூடுதல் நேரம் இயங்க, பள்ளியை அனுமதிக்கலாம்.'மழலையர் பள்ளிகளின் நிர்வாகத்தை, அறக்கட்டளை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் என்பதால், இவ்வளவு கண்டிப்பான அம்சம் தேவையில்லை. ஏனென்றால், மழலையர் பள்ளிகளை, பெரும்பாலும் வீடுகளில் வைத்து, பெண்கள் நடத்துகின்றனர்.

எனவே, தனியார், நிறுவனங்கள், பங்குதாரர்கள், மழலையர் பள்ளிகளை நடத்தினாலும், அதை ஏற்கலாம்; ஆனால், அவற்றின் செயல்பாடு களுக்கு யார் பொறுப்பு என்பதை குறிப்பிட வேண்டும்.'ஒரு கி.மீ., தூரத்துக்குள் வசிக்கும் குழந்தைகளை தான், மழலையர் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்' என்பதை, மூன்று கி.மீ., தூரம் என வைத்து கொள்ளலாம். மேற்கூறிய திருத்தங்களை கொண்டு வந்து, புதிய விதிமுறைகளை, டிச., 15ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.இவ்வாறு 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைப்பு: டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைப்பு: டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.அதேசமயம் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. மேலும் டீசல் விலை 50 குறைக்கப்பட்டது.இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசா குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

அரசு பள்ளி மாணவர்கள் 1,000 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை

அரசு பள்ளி மாணவர்கள் 1,000 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் ஹெல்த் திட்டத்தில் மருத்துவர் குழுவினர் பரிசோதனை செய்தனர்.அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோய் பாதிப்பு, சத்து குறைபாடு களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசு சார்பில் ஸ்கூல் ஹெல்த் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திட்டம் அந்தந்த மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநரின் கீழ் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோய் கண்டறியும் சோதனை, கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.மாணவர்களுக்கு நோய் கண்டறியும் சோதனையில் ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு பெண், ஆண் மருத்துவர், தலா ஒரு செவிலியர், மருந்தாளுனர், லேப் டெக்னீசன் ஆகியோர் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதில், ரத்த சோகை, பற்கள், கண் பார்வை பிரச்னை, தொற்று நோய் குறித்து சோதனை செய்கின்றனர். ஒரு சில மாணவர்களுக்கு நோயின் தன்மை அதிகமாக இருப்பின், அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். இது போன்ற மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில், அனைத்து துறை சார்ந்த மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் மருத்துவர் ஒருவர் கூறுகையில்: அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கு பற்கள் பாதுகாப்பு, உணவு அருந்து வதற்கு முன் கைகளை எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கடந்த மூன்று மாதத்தில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம் என்றார்.

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு
தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், நவ., 2ல் வெளியாகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செப்டம்பரில் நடந்த தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், நவ., 2 மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.தேர்வர்கள், http:/dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், நவ., 4 முதல், 6 வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்துக்கு நேரில் சென்று, 'ஆன்லைனில்' உரிய கட்டணத்துடன் பதிவு செய்ய வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில்உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில் தான், மறுகூட்டல் முடிவு வெளியாகும்.

இடமாறுதல் கலந்தாய்வில் குளறுபடி?

இடமாறுதல் கலந்தாய்வில் குளறுபடி?
அரசுக் கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் பணியிட மாறுதல் அளிக்க மறுத்துவிட்டது என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் உள்ள 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி, 31-இல் வரை நடைபெறுகிறது.

நிபந்தனை தளர்த்தப்பட்டும் பலனில்லை?

வழக்கமாக, புதிதாக நியமிக்கப்படும் பேராசிரியர்களின் இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு பெற்றதும், பணி மூப்பு அடிப்படையில் பொதுக் கலந்தாய்வு மூலம் இடமாறுதல்கள் வழங்கப்படும். ஆனால், இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டதால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாகி 2015-இல் நியமனம் பெற்றவர்களும் விண்ணப்பித்தனர்.இந்த நிலையில், கலந்தாய்வில் குளறுபடி நடைபெறுவதாகவும், சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் கிடைக்கும் என்ற ஆவலில், கைக் குழந்தையுடன் சென்னைக்கு வந்த பல பெண் பேராசிரியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக,2015-இல் பணியில் சேர்ந்தவர்களே பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக பெண் பேராசிரியர்கள் கூறினர்.

"நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு':

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர், அவர் பணிபுரியும் கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 50 சதவீதத்துக்கு மேல் பூர்த்தியாகியிருக்க வேண்டும். அடுத்ததாக, கேட்கக் கூடிய கல்லூரியில் காலியிடம் இருக்க வேண்டும்.இந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகியபோதும், பலருக்கு இடமாறுதல் அளிக்க கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மறுத்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.

"சிலருக்கு மாறுதல்; பலருக்கு மறுப்பு':

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சிவராமன் கூறியது: புதிதாக நியமனம் பெற்றவர்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு இடமாறுதலை அளித்த இயக்குநர் அலுவலகம், பலருக்கு இடமாறுதல் அளிக்கமறுத்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிபந்தனைகளை நிறைவு செய்யக் கூடிய புதிய பேராசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க இயக்குநர் அலுவலகம் முன்வர வேண்டும் என்றார்.

கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு
செய்யாறில் நடைபெற்ற கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டனர்.திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் செய்யாறு இந்தோ அமெரிக்கன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, திருவண்ணமாலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் குறித்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வட்டாரமாக கேட்டு வந்துள்ளார். அப்போது தலைமையாசிரியர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியர்கள், மாலையில் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது மாநில திட்ட இயக்குநரைக் கண்டித்து குரல் எழுப்பியபடியே வெளியேறினர்.பின்னர் மாநில தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் திரண்ட தலைமையாசிரியர்கள் மாநிலத் திட்ட இயக்குநரைக் கண்டித்து கோஷமிட்டனர்.

பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுவிடும்

பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுவிடும் அதிகாரிதகவல்
அங்கீகாரம் புதுப்பிக்காமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்று விடும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்தார்.பள்ளிகளின் அங்கீகாரம்தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிபள்ளிகள் என்று 3 வகையான பள்ளிகள் உள்ளன.

இவற்றில் நர்சரி பள்ளிகள் தொடக்கப்பள்ளி இயக்குனர் ரெ.இளங்கோவன் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் 5 ஆயிரம் நர்சரி பள்ளிகள் உள்ளன. அது போலமெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்து 46 மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருக்கின்றன. மொத்தத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளில் ஏராளமான பள்ளிகள் அங்கீகாரம் பெற்று உள்ளன. நிலம் குறைவாக உள்ளது, கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை என்ற காரணங்களால் 600-க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பள்ளிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களால் அங்கீகாரம் புதுப்பிக்க இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை கூறியதாவது:-

தேர்வுக்கு முன்பாகபுதுப்பிக்கப்படும்மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர்களால் பள்ளிகள் அங்கீகாரத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. தரமாக இருந்தால் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். அங்கீகாரம்புதுப்பிக்கப்படாமல் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களின் நிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும். அதற்குள்ளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரமும் புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு பிச்சை தெரிவித்தார்.

ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி

ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி
அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர்.அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.

இதில், 400 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வில் தமிழ், அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு, போதிய காலியிடம் இல்லை. நேற்றைய கலந்தாய்வில், 1989ல் பணியில் சேர்ந்த, அறிவியல் பட்டதாரிகளுக்கே பதவி உயர்வு பரிசீலிக்கப்பட்டது.தமிழ் பாடத்தில், 2001; கணிதம், 2002; வரலாறு, 2006ல் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் மட்டும், 2014ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு கூட, பதவி உயர்வு கிடைத்தது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறும்போது, 'தமிழ், அறிவியல், வரலாறு பாடங்களில் காலியிட எண்ணிக்கையை விட, அதில் பட்டம் பெற்ற ஆசிரியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள், ஆங்கில பட்டப்படிப்பு முடிக்காததால், அவர்களால், பதவி உயர்வு பெற முடியவில்லை' என்றனர்.

1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்

1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்
தமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.

ஆனால், 2003க்கு பின், புதிய ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்ட பின், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்புநிதிக் கணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளன. இனி, வருங்கால வைப்புநிதிக் கணக்குகளை, ஏ.ஜி., அலுவலகத்தில் தெரிந்து கொள்ள, ஆசிரியர்களுக்குதொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், இதுவரை கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குகள் சரிசெய்யப்பட்டு உள்ளன. இந்த கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படுவதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளை www.ctet.nic.in,​​ www.cbse.nic.in​ ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.2015-ஆம் ஆண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து மொத்தம்959 மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 7.5 லட்சம் பேர்எழுதினர்.இந்தத் தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. வெள்ளிக்கிழமைவெளியிட்டது.தேர்வில் பங்கேற்ற அனைவருக்குமான மதிப்பெண் பட்டியலும், தேர்வில்தகுதி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழும் விரைவில் விநியோகிக்கப்படும் என சி.பி.எஎஸ்.இ. தெரிவித்துள்ளது.

அடுத்த தேர்வுகள்:

2016-ஆம் ஆண்டுக்கான சி.டி.இ.டி. தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியன்றும், செப்டம்பர் 18-ஆம் தேதியன்றும் அடுத்தடுத்து நடத்தப்படும் எனவும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.