Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 24 November 2015

வேலூரில் 1,317 பள்ளிக் கட்டிடங்கள் மழையால் பலத்த சேதம்: அரசுக்கு கல்வித் துறை அறிக்கை

வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 1,317 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக பல்வேறு பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக் கட்டிடங்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு புகார் சென்றது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்து, அதற்கான விவரங்களை தரும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் 1,881 பள்ளிகளும், 256 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், 267 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 87 அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன.
இவற்றில், 336 தொடக்கப் பள்ளிகள், 890 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், 91 மேல்நிலைப் பள்ளி கட்டிடங்கள் மழையால் சேதமடைந்துள்ளன. 2 தொடக்கப் பள்ளிகளில் கழிப்பறைகள் முழுமையாக இடிந்து சேதமடைந்துள்ளன. 139 பள்ளிக் கட்டிடங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. 270 வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. மின் சாதனங்கள் பாதிப்பு ஏதும் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி. கல்லூரிகளுக்கு நாளை நவம்பர் 25 விடுமுறை அறிவிப்பு.

சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி. கல்லூரிகளுக்கு  நாளை நவம்பர் 25 விடுமுறை அறிவிப்பு.

Flash News : கன மழை- திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (25.11.2015) விடுமுறை

திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவ மழை காரணமாக தீபாவளி உட்பட கடந்த 17 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..
கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல காஞ்சிபுரம்ஆட்சியர் அறிவுறுத்தல்..

வேலூர் மாவட்டத்தில் நாளை (25.11.2015) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்..

வேலூர் மாவட்டத்தில் நாளை (25.11.2015)
பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்..

புதிய பென்ஷன் திட்டத்தில் பலன் பெறாமலே இறந்த தம்பதி

புதிய பென்ஷன் திட்டத்தில் பலன் பெறாமலே இறந்த தம்பதி

TNPSC குரூப்-2ஏ தேர்வு: 8 லட்சம் பேர் விண்ணப்பம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ பணியில் 1,947 காலியிடங்களுக்கு 8 லட் சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், கீழ்நிலை எழுத்தர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகிய பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது.

பட்டப் படிப்பை கல்வித் தகுதியாகக் கொண்ட இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது அக்டோபர் மாதம் 12-ம் தேதி தொடங்கியது.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தேர்வர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு நவம்பர் 11-ம் தேதியிலிருந்து 18-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டது. குரூப்-2ஏ தேர் வுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப் பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க/உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி

📚SPD-1960/IED Training/SSA/2015 நாள்:12.10.2015 ன்படி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க/உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி

📚மாவட்ட அளவில்
தொடக்கநிலை(23.11-27.112015 முடிய 5 நாட்கள்)

📚வட்டார அளவில் (7.12.2015-11.12.2015) வரை 5 நாட்கள்

📚உயர் தொடக்க நிலை மாவட்ட அளவில் (7.12.15-11.12.2015) வரை 5 நாட்கள்.

📚வட்டார அளவில் (16.12.2015-18.12.2015&21,22) வரை 5 நாட்கள்.

சென்னையில் மா.தொ.க அலுவலர்களுக்கான கூட்டம்.

சென்னையில் மா.தொ.க அலுவலர்களுக்கான கூட்டம். ( ஆசிரியர்கள் வைப்பு நிதி கணக்கு முடித்தல் சார்பான )-இயக்குநர் செயல்முறைகள்
DEE.20046/C2/2015
Dt.23.11.15
All DEEOs Meeting except Chennai& Nagerkoil on 04.12.15 @11am @DEE Chennai reg Panchayat/Municipal School TRs Provident Fund Audit

கல்விக் கடனுக்கு அசலுக்கு மேல் வட்டி பொறியியல் பட்டதாரிகள் அதிர்ச்சி


சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகளில் கல்விக் கடன் பெற்றவர்களிடம் அசலுக்கு மேல் வட்டி கேட்பதாக பாதிக்கப்பட்ட பொறியியல் பெண் பட்டதாரிகள் சிவகங்கை கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.கடந்த காங்., ஆட்சியின் போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஏழை மாணவர்கள் கல்வி கற்க வங்கிகள் மூலம் கல்விகடன் வழங்கச் செய்தார். தேசிய வங்கிகள் பொறியியல், மருத்துவம், பி.எட்., உள்ளிட்ட படிப்பிற்கு கல்விக் கடன் வழங்கின.

கடன் பெறும் மாணவர்கள்,படிப்பை முடித்து, வேலை தேடுவதற்கு 6 மாதம் ஆகும். அது வரை கடன் பெற்றோரிடம் வட்டி வசூலிக்கப்படமாட்டாது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.குட்டி போடும் வட்டிகொல்லங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் சிலர், கடந்த 2010ல் காளையார்கோவிலில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் ஆண்டுக்கு ரூ.46,500 வீதம் 4 ஆண்டுக்கு ரூ.1.82 லட்சம் கல்விகடன் பெற்று, பொறியியல் பட்டம் பெற்றனர். படிப்பு முடித்தவுடன், வேலைக்கு சேர்ந்தவர்கள் மாதந்தோறும்வங்கியில் பெற்ற தொகையை வட்டியுடன் செலுத்த முன் வந்தனர்.இது குறித்து விசாரிக்க வங்கிக்கு சென்றபோது, கடன் பெற்ற மாதத்தில் இருந்தே வட்டி கணக்கிடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

4 ஆண்டில் ரூ.1.82 லட்சம் பெற்ற பொறியியல் பெண் பட்டதாரி ஒருவருக்கு அசல், வட்டியுடன் ரூ.2.75 லட்சம் வரை கட்ட வேண்டும் என வங்கிநிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சூழல் அங்கு கடன் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும்ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியுற்ற மாணவிகள் சிலர் நேற்று கலெக்டர்எஸ்.

மலர்விழியிடம் புகார் அளித்தனர். முன்னோடி வங்கி மேலாளர் விசாரணைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.தேசிய வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில்,“கல்வி கடன் பெறும் மாணவர்கள், அவர்கள் கல்வியை முடித்து 6 மாதம் வரை அசல், வட்டி கேட்கமாட்டோம். அதே நேரம், அவர்கள் கடன் பெற்ற மாதத்தில் இருந்து, கடனுக்கு தனி வட்டி மட்டுமே போடுவோம். பட்டம் பெற்று, 6 மாதத்திற்கு பின்னும் அசல்,வட்டியை கட்டாமல் விட்டால் தான், அசலுடன் வட்டியை சேர்ப்போம். அரசு வட்டி சலுகை தொகையை வழங்கிய பின் கழிக்கப்படும்,” என்றார்.

மாநகராட்சி பள்ளிகளில் 'டேப்லெட்' கல்வி கற்றல், கற்பித்தலை மேம்படுத்த முயற்சி


கோவை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்த, 'டேப்லெட்' கல்வி முறை, அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் சுயமாக கற்கும் திறன், புரிதல் கல்வி மேம்படும்.

கோவை மாநகராட்சியிலுள்ள, காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில், மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த, 'அமெரிக்கன் இந்தியன் பவுண்டேஷன்' சார்பில், 'டேப்லெட்' கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.இந்த முறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், அனைத்து மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளிலும், 'டேப்லெட்' கல்வி முறையை புகுத்த திட்டமிடப்பட்டது.திட்டத்துக்காக, மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், திட்டத்தை செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவு செய்யப்பட்டுள்ளது.பள்ளியில், 6 - 10ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களையும் நவீன தொழில்நுட்ப முறையில் கற்பிக்கவும், ஆசிரியர்கள் இல்லாமல் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 7.75 லட்சம் ரூபாயில், 31 'டேப்லெட்' வாங்கப்பட்டு, பள்ளி ஆய்வுக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ளது.உயர்நிலை வகுப்புகளின் அனைத்து பாடங்களின், இ - பாடத்திட்டம் சாப்ட்வேர், அனைத்து டேப்லெட்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஒரு ஆசிரியர் ஒரு மாதத்தில்,ஒன்று அல்லது இரண்டு பாடங்களை, டேப்லெட் கல்வி முறையில் போதிக்க வேண்டும்.

முதல் படி

ஆறு முதல், 10ம் வகுப்பு மாணவர்கள், வாரம் ஒரு முறை ஒரு பாடத்துக்கு, 'டேப்லெட்' ஆய்வுக்கூடத்துக்கு அழைத்து செல்லப்படுவர். 'பிளிப்டு கிளாஸ்' முறையில், மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை துாண்டும் வகையில், பாடம் பற்றிய முன்னோட்டம் அன்றாட வாழ்வுடன் இணைந்த செயல்முறைகளுடன், பல்வேறு காட்சிகளாக விளக்கப்படுகிறது.'பவர் பாயின்ட்' முறையில், 'டிஜிட்டல் ஈக்குலைசர் வே ஆப் டீச்சிங்' முறையில், பாடத்தை படித்து புரிந்து கொள்ளலாம். ஒரு மார்க் வினா, குறு மற்றும் நெடுவினா கேள்விகளுக்கு, பதில் தயாரிக்கும் முறைகளை சுயமாக கற்றுக்கொள்கின்றனர்.

இரண்டாம் படி

ி'டேப் - லெட்' கல்வி முறைக்கு பின், வகுப்பில் மாணவர்களுக்குள் கலந்துரையாடல் நடக்கும். அப்போது, பாடம் பற்றிய மாணவர்களின் சந்தேகத்துக்கு மாணவர்களே விளக்கமளிக்க வேண்டும். மாணவர்களால் விளக்கமளிக்க முடியாத கேள்விக்கு ஆசிரியர்கள் பதில் கூறுவர்.அதன்பின், ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். மாணவர்களால் பதில் அளிக்க முடியாத பகுதியை ஆசிரியர் விளக்குவார். இதனால், பாடத்தின் அனைத்து பகுதியையும் மாணவர்கள் புரிந்து படிக்க முடியும்.

மூன்றாம் படி

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்களின் அறிவு, புரிதல், செயல்படுத்துதல், ஒப்பீடு செய்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவர்களின் சுய கற்றலும், பாடத்திட்டத்தை முழுமையாக புரிந்து படிக்கும் திறனும் மேம்படும். ஆசிரியர் விடுப்பில் இருந்தாலும், அந்த ஆசிரியர் கற்பிக்க வேண்டிய பாடத்தை, 'டேப்லெட்' கல்வி முறையில் கற்றுக்கொள்ளலாம். கற்பதை நினைவில் நிறுத்தவும், தேர்வின் போது வெளிப்படுத்தவும், இது உதவும்.மாநிலத்தில் முதல் முறையாக, 'டேப் லெட்' கல்வி முறை, கோவை மாநகராட்சியில் புகுத்தப்படுகிறது. வரும், 25ம் தேதி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில், இக்கல்வி முறை துவக்க விழா நடக்கிறது.மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''முதல் கட்டமாக, வரதராஜபுரம் உயர்நிலைப்பள்ளியில், டேப்லெட் கல்வி முறை துவங்கப்படுகிறது. தொடர்ந்து, அனைத்து மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.

ஜீன்ஸ் அணிந்தால் வேலை இல்லை ஐ.ஐ.டி., ஆடை கட்டுப்பாடு


'மாணவ, மாணவியர் ஜீன்ஸ் அணிந்து வந்தால், அவர்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் வேலை வழங்கப்படாது' என,ஐ.ஐ.டி.,யில் ஆடைக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில், கல்லுாரி வளாகத்தில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம், பணி வாய்ப்பு வழங்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உடனடியாக, பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேரலாம். இதன்படி, இந்த ஆண்டு பட்டப்படிப்பில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை மற்றும் அரசு இன்ஜி., கல்லுாரிகள், வி.ஐ.டி., பல்கலை, எஸ்.ஆர்.எம்., பல்கலை உள்ளிட்டவற்றில், கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், இறுதி ஆண்டில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு, டிச., 1ல், கேம்பஸ் இன்டர்வியூ நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, ஆடைக் கட்டுப்பாட்டை, ஐ.ஐ.டி., அறிவித்துஉள்ளது.
அதன் விவரம்:
* கல்லுாரி வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வரும் போதும், வேலைவாய்ப்பு தேர்வு எழுத வரும் போதும், மாணவர்கள் காலர் வைத்த சட்டை அல்லது காலர் வைத்த டீ - ஷர்ட் அணியலாம்; ஆனால் அதில், எந்த எழுத்துக்களும் இருக்கக் கூடாது. சட்டையை, 'இன்சர்ட்' செய்திருக்க வேண்டும். முழுக்கால் பேன்ட் அணிய வேண்டும்.
* மாணவியர், 'சல்வார் கமீஸ்' எனப்படும் தொளதொள ஆடை மட்டுமே அணியலாம்; தலை முடியை முறையாக சீவியிருக்க வேண்டும். நன்றாக சுத்தம் செய்து, 'பாலிஷ்' செய்யப்பட்ட காலணி அணிந்திருக்க வேண்டும். 'ப்லிப், ப்லாப்' எனப்படும், ரப்பர் மற்றும் கழிப்பறையில் பயன்படுத்தும் காலணிகளை கண்டிப்பாக அணியக் கூடாது.
* டிச., 1 முதல் நடக்கும் இன்டர்வியூவில் பங்கேற்க வரும் போது,அலுவலக ரீதியாக பயன்படுத்தும் முழுக்கை சட்டை மற்றும் முழுக்கால் பேன்ட் மட்டுமே அணியலாம். மாணவ, மாணவியர் கண்டிப்பாக,ஜீன்ஸ் அணியக் கூடாது.
* இந்த ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால், வேலை வாய்ப்புக்கான நடைமுறையில் அனுமதி மறுக்கப்படும்.இவ்வாறு சென்னை ஐ.ஐ.டி., உத்தரவிட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.

வட கிழக்கு பருவ மழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சென்னை, கடலுார், விழுப்புரம், வேலுார், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், பள்ளிகளுக்கு, நவ., 9 முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஐந்து லட்சம் மாணவர்கள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, புத்தகப் பை, வழிகாட்டி நுால்கள், சான்றிதழ்களை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள், குடும்பத்தினருடன் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். பள்ளி திறந்ததும், புதிய புத்தகங்கள், சீருடை, புத்தகப் பை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், அரையாண்டுத் தேர்வை தள்ளிவைக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முந்தைய அறிவிப்புப்படி, 10ம் வகுப்புக்கு டிச., 9; பிளஸ் 2வுக்கு டிச., 7ல் அரையாண்டுத் தேர்வு துவங்கி, டிச., 22ல் முடிய வேண்டும். ஆனால், மழை விடுமுறையால், ஆறு மாவட்டங்களுக்கு மட்டும்,அரையாண்டுத் தேர்வை, ஜனவரி முதல் வாரத்தில் நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் அவர்களுக்கு பாடங்கள், முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மழை விடுமுறையால்,தேர்வுக்கான பாடங்கள் நடத்துவதில் பிரச்னை இல்லை.ஆனால், மழை பாதித்த இடங்களில், மாணவர்களிடம் பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன; மீதமிருக்கும் புத்தகங்களும் நனைந்துள்ளன.

பல மாணவர்களுக்கு புத்தகங்கள் சேதமாகி விட்டன. கணிதம், அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடங்களில், பாடப் புத்தகங்களை விட, ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்திய குறிப்புகளை, நோட்டுப் புத்தகத்தில் மாணவர்கள் எழுதி வைத்திருப்பர்.தற்போது நோட்டுப் புத்தகம் இல்லாததால், அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாது. புதிய நோட்டுப் புத்தகம் கொடுத்து, மற்ற மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களைப் பார்த்து எழுதவும், பாடங்களைப் படிக்கவும் கால அவகாசம் தேவை. எனவே, டிச., 7ல் துவங்க உள்ள அரையாண்டுத் தேர்வை தள்ளி வைத்து, டிச., 16 அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின், ஜனவரியில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதே போன்று, டிசம்பரில் வழக்கமாக அறிவிக்கப்படும், அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில், பண்டிகை நாட்களுக்கு மட்டும் இந்த ஆண்டுவிடுமுறை அளித்து விட்டு, சனிக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் பள்ளிகளைநடத்தலாம் என்றும் பரிசீலனை செய்கிறோம். ஆனால், மழை விட்டால் தான் பள்ளி தேதி குறித்து, சரியாக முடிவெடுக்க இயலும்.இதில், 1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்விலோ, விடுமுறையிலோ பெரிய மாற்றம் இருக்காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரையாண்டுத் தேர்வு தள்ளிப்போகும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், ஆறு மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் குஷியடைந்துள்ளனர்.

தேர்வை ரத்து செய்ய முடியுமா?

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ்கூறியதாவது:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டுத் தேர்வு தான் பொதுத் தேர்வுக்கு முன்னோட்டம் போன்றது. இந்த தேர்வில், அவர்கள் தயாராவதன் மூலமே, பொதுத் தேர்வை சரியாக எழுதமுடியும். எனவே, அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய முடியாது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வர உள்ளதால், பொதுத் தேர்வையும் முன்கூட்டியே நடத்த வேண்டியுள்ளது. எனவே, நீண்ட நாட்கள் அரையாண்டுத்தேர்வை தள்ளிப் போடவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இன்று விடுமுறை அறிவிப்பு:

கடந்த, 20 நாட்களாக பெய்யும் தொடர் மழையால், சென்னை, காஞ்சிபுரம்மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, இன்றும், விடுமுறை அளித்து, மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். சென்னை பல்கலை மற்றும் சட்ட பல்கலையில், இன்றும், நாளையும் நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தள்ளிவைக்கப்பட்ட தேர்வுக்குபதிலாக புதிய தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலை யில், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி மற்றும் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி யில், நவ., 28ம் தேதி வரை, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அந்த தேர்வுகளின் புதிய தேதியை பல்கலை அறிவித்துள்ளது.இதன் விவரங்களை, www.annauniv.edu/reschedule_ud.pdf என்ற இணையதள முகவரியில் அறியலாம். முதுகலைப் படிப்பிற்கான தேர்வு அட்டவணையும், அண்ணா பல்கலை இணையதளத்தில் உள்ளது.

கனமழை காரணமாக எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை

தொடக்கக் கல்வி - கடந்த ஒரு வார காலமாக பெய்யும் கனமழை காரணமாக எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை குறித்து இயக்குனர் உத்தரவு

தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு சட்டம் 2016ல் அமலாகிறது


'தமிழகம் தவிர்த்து, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த உள்ளன,'' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

அமல்படுத்தப்படவில்லை நாட்டின் மக்கள் தொகையில், ஏழைகள் என கண்டறியப்பட்டுள்ள, மூன்றில் ஒரு பங்கினருக்கு, மாதம்,5 கிலோ அரிசி, ஒன்று முதல், மூன்றுரூபாய் விலையில் வழங்கப்படவேண்டும் என்பது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சம். வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, இந்த திட்டம் கருதப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டம், முந்தைய காங்., அரசால், பார்லிமென்டில், 2013ல் நிறைவேற்றப்பட்டது. ஓராண்டிற்குள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இச்சட்டத்தை பின்பற்ற வலியுறுத்தப்பட்டன. எனினும், மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட பின்னும், நாடு முழுதும், இன்னமும் உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், டில்லி யில் நேற்று, அனைத்து மாநில உணவுத் துறை செயலர்கள் மாநாட்டை கூட்டி, உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அமைச்சர் பஸ்வான் விவாதித்தார். இதன்பின், நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

உணவு பாதுகாப்பு சட்டத்தை, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்த, தமிழகம் தவிர்த்து, அனைத்து மாநிலங்களும் உறுதியளித்து உள்ளன. மொத்தமுள்ள, 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில், இந்த சட்டத்தை இதுவரை அமல்படுத்தாத, 14 மாநிலங்களில், ஆந்திராவும், சிக்கிமும், இந்த ஆண்டிற்குள் அமல்படுத்த உறுதியளித்து உள்ளன. மார்ச் மாதத்திற்குள்...உத்தர பிரதேசம், மேகாலயா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களும், அந்தமான், நிகோபார் யூனியன் பிரதேசமும், அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்த உள்ளன. குஜராத், கேரளா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்கள், மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்த உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதமிழக அதிகாரிகள், 'தமிழகத்தில், அனைவருக்கும் குறைந்த விலையில் அரிசி வழங்கும் திட்டம், சிறப்பாகசெயல்படுத்தப்படுவதால், உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வில்லை; அடுத்த ஆண்டு ஜூலைக்குள் அமல்படுத்த உள்ளோம்' என்றனர். ரூ.4,000 கோடி மிச்சம்போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளதால், இரு ஆண்டுகளில், 4,000கோடி ரூபாய் மத்திய அரசுக்கு மிச்சமாகி உள்ளது. உணவு மானியத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து, மாநில அரசுகளை, நாங்கள் வற்புறுத்த மாட்டோம்; அது, அவர்களின் விருப்பத்தை பொருத்தது

பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவு


பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை, 'பம்ப்செட்' மூலம் வெளியேற்றவும், கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மழை குறைந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. 

பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தேங்கியுள்ள நீரை, பொதுப்பணித்துறை மூலம் அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.பொதுப்பணித்துறையின் பணிகளை பார்க்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம், 'பம்ப்செட்' மூலம் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வெள்ளப் பெருக்கினால், பள்ளி கட்டடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளின்நிலவரம் குறித்து, தினமும் மாலை 5:00 மணிக்கு, அறிக்கை தர, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி இருக்கும் இடம்; மாணவ, மாணவியர் எங்கிருந்து வருகின்றனர்; பள்ளி பகுதியிலும், மாணவர் வரும் வழியிலும் மழை நிலவரம், வெள்ள நிலைமை குறித்த தகவல்களை, அறிக்கையில் இடம் பெறச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.சுத்தம் செய்யப்பட்ட பள்ளி வளாகங்களில், சுகாதாரத் துறை மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கவும் அதிகாரிகள்உத்தரவிட்டுள்ளனர்.மாற்று கட்டடங்களில் பள்ளிகள்அபாயகர பள்ளி கட்டடங்கள், பாதுகாப்பில்லாத வகுப்பறை கட்டடங்களுக்கு பதில், அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் சமூகநலகூடங்களில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

தி.மலை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

தி.மலை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கன மழை-4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (24.11.2015) விடுமுறை

*தூத்துக்குடி,ஒட்டப்பிராடம் வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

*சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

*திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை