Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 9 June 2016

ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள்/அலுவலர்கள் "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி" ஏற்க இயக்குனர் உத்தரவு

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"பலாப்பழம் நன்மைகள்"

முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன்-படுத்தப்-பட்டு வருகிறது. பல வழிகளில் மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு

கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கு மவுசு குறைகிறதா?

தமிழக அரசு வழங்கிவரும் விலையில்லா மடிக்கணினி கிடைக்க வாய்ப்பில்லாததால், பிளஸ் 1 கணினி அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்கள் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது.

குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ல் வெளியாக வாய்ப்பு

 நடைபெற்று முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ள குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

+2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2016 சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ்(தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பித்தல்-செய்திக் குறிப்பு.


தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்


பள்ளிக்கல்வி - தேர்வுநிலை பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்டம்தோறும் சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்


பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு 'ஆப்சென்ட்': சி.இ.ஓ., அதிரடி

திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 'ஆப்சென்ட்' போட்டார். திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, நேற்று காலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் திடீரென சென்றார்.

அங்கு ஆய்வு நடத்தியதில், தலைமை ஆசிரியர் முருகேசன் பள்ளிக்கு வரவில்லை என தெரிந்தது. சக ஆசிரியர்களிடம் விசாரித்ததில், கடந்த நான்கு நாட்களாக பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதையடுத்து, வருகை பதிவேட்டில் தலைமை ஆசிரியருக்கு முதன்மை கல்வி அலுவலர் 'ஆப்சென்ட்' போட்டார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வருகை தந்த தகவலை அறிந்த பொதுமக்கள், நேரடியாக சென்று அவரிடம் முறையிட்டனர், அவர்கள் கூறுகையில், 'தலைமை ஆசிரியர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே பள்ளிக்கு வரவில்லை, பாடமும் நடத்தவில்லை. எங்கள் குழந்தைகளை வேறு கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம்' என்று கூறினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் கூறுகையில், 'பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து உங்கள் குழந்தைகளை இதே பள்ளியில் படிக்க வையுங்கள்' என்று கூறிவிட்டு சென்றார்.

கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.

அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது. 7வது ஊதியக்குழுவான இது, ஏற்கனவே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுகுறித்து பரிந்துரைக்க முடிவுசெய்துள்ளது. அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இறுதிசெய்து அரசுக்கு அளிக்கவிருக்கிறது.

இது, தனது பரிந்துரையில் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.2.7 லட்சம் வரை அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த உயர்வானது கீழ்மட்ட ஊழியர்களுக்கு ரூ.3,000 அதிகமாகவும், உயர்மட்ட ஊழியர்களுக்கு ரூ.20,000 அதிகமாகவும் இருக்கும். இந்த உயர்வின் காரணமாக, 47 லட்சம் மத்தியஅரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் பயனடைவார்கள்.

கவுன்சிலிங் எப்போது? ஏக்கத்தில் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சிலிங், இன்னும் அறிவிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தொடக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிவரை, இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும், பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

வழக்கமாக, மே மாதம் நடத்தி முடிக்க வேண்டிய கவுன்சிலிங், இந்த ஆண்டு தேர்தல் காரணமாக தள்ளிப்போனது.தேர்தல் முடிந்தும், பணி மாறுதலுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படவில்லை.இம்மாதத்திற்குள் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டாலும், அனைவரிடமும் மனுக்களை பெற்று, அதைபரிசீலனை செய்து, கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற, இரு மாதங்கள் ஆகிவிடும்.இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதம், ஏராளமான தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாததால், பல பள்ளிகளில் சான்றிதழ் வழங்கும் பணி மற்றும் நிர்வாகத்தில் தேக்க நிலை காணப்படுகிறது. அந்த பணியிடத்திற்கு கவுன்சிலிங் மூலம் ஆட்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே, இதை சரிப்படுத்த முடியும்.

இது ஒருபுறமிருக்க, பணி மாறுதலை எதிர்பார்த்துள்ள பல ஆசிரியர்கள், இன்னும் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, பணி மாறுதல் கவுன்சிலிங் குறித்து, அரசு விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஜூன் 27ல் இன்ஜி., பொது கவுன்சிலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில் பொது கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதற்கு, 2.22 லட்சம் பேர், 'ஆன்லைனில்' தங்கள் பெயரை பதிவு செய்தனர்.ஆனால், 1.85 லட்சம் பேர் மட்டுமே, விண்ணப்ப கட்டணம் செலுத்திஉள்ளனர். அவர்களில், 1.34 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்களை நகல் எடுத்து, அண்ணா பல்கலை வழங்கிய கால அவகாசமான, ஜூன், 4ம் தேதிக்குள் அனுப்பினர். தற்போது விண்ணப்ப பரிசீலனை நடந்துவருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தேதியை, அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன், நேற்று அறிவித்தார்.

கணேசன் தெரிவித்த விவரம்

விண்ணப்பங்களுக்கான, 'ரேண்டம்' எண், ஜூன், 20ல் வெளியிடப்படும். மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் படி, தரவரிசை பட்டியல், ஜூன், 22ல் வெளியாகும். ஜூன், 24ல் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், ஜூன், 25ல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கும்.மற்ற மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கும். பொது கவுன்சிலிங் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது, தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு நாளில் அறிவிக்கப்படும்.

ஆன்லைனில் அழைப்பு கடிதம்

இந்த ஆண்டு கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதம், தபாலில் அனுப்பப்படாது. கவுன்சிலிங்குக்கு தகுதியான அனைவருக்கும், இணையதளத்தில் ஆன்லைன் அழைப்பு கடிதம் பதிவேற்றப்படும். மாணவர்கள், தங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் கவுன்சிலிங் விண்ணப்ப எண் ஆகியவற்றை பயன்படுத்தி, அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

இலவச தங்குமிடம்

இந்த ஆண்டு முதல், கவுன்சிலிங்குக்கு வரும் மாணவியர், பெண் உறவினர் துணையுடன் வந்தால், அவர்கள் அண்ணா பல்கலை வளாக கட்டடத்தில் தங்க, இலவச இட வசதிஅளிக்கப்படும்.

TNPSC :குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழக அரசுத்துறையில், குரூப் 2 ஏ பிரிவில், நேர்முக எழுத்தர், உதவியாளர், திட்ட இளநிலை உதவியாளர், கீழ்நிலை எழுத்தர் மற்றும் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பதவிகளுக்கு, 1,676 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஜனவரி, 24ல் நடந்த தேர்வில்,6.54 லட்சம் பேர் பங்கேற்றனர்.

அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை ஆகியவை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:தேர்வர்கள் தங்களின் பொது தரவரிசை, சமூகரீதியான தரவரிசை மற்றும் சிறப்பு பிரிவு தரவரிசை ஆகியவற்றை, தங்களின் பதிவு எண் மூலம் அறியலாம்.

இணையவழி விண்ணப்பத்தில், தேர்வர்கள் குறிப்பிட்ட வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள், ஜூலை 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை, காலியிடம் மற்றும் இடஒதுக்கீட்டு விதியின்படி, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத்தேர்வு 'தத்கல்' விண்ணப்பம்

பிளஸ் 2 சிறப்பு துணைதேர்வுக்குநாளையும், நாளை மறுநாளும், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அவர்கள், கடந்த மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வராகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.ஏற்கனவே எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு விண்ணப்பித்தும் வருகை புரியாத, அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில், தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்கள், சென்னையில் மட்டுமே தேர்வெழுத இயலும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.அப்போது, தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தங்கள், 'ஹால் டிக்கெட்'டையும், பதிவுசெய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அதற்கு உரிய கட்டணமும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 21ல் 'டீட்' தேர்வு

அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, ஆகஸ்ட், 21ல், 'டீட்' நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

அண்ணா பல்கலை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 650 ரூபாய்க்கான டி.டி.யுடன் அனுப்ப வேண்டும். எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,க்கு மட்டும், தொலைநிலை கல்வி தகுதித் தேர்வான, 'டீட்' நுழைவு தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பங்களை ஆக., 10க்குள் அனுப்ப வேண்டும்; ஆக., 21ல் நுழைவுத் தேர்வு நடக்கும்.எம்.எஸ்சி., கம்ப்யூ., சயின்ஸ் படிப்புக்கு, செப்., 3 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என, தொலைநிலைக் கல்விப் பிரிவு அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., படிப்பு விண்ணப்பங்கள் குறைவு

தமிழகத்தில், அரசு, சுய நிதி கல்லுாரிகள்மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூன், 7ல் முடிவடைந்தது.

அஞ்சல் துறைக்கு வந்த மனுக்கள், நேற்று முன்தினம் இரவு, மருத்துவக் கல்வி இயக்ககத்தில் ஒப்படைக்கப்பட்டன. மொத்தம், 26 ஆயிரத்து, 313 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. கடந்த கல்வியாண்டில், 32 ஆயிரத்து, 300 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு, 6,000 விண்ணப்பங்கள் குறைந்துள்ளது. இது, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:'விண்ணப்ப வினியோகம், மே, 9ல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு இருந்தது. 'நீட்' தேர்வு குழப்பத்தால், மே, 26ல் தான் வினியோகம் துவங்கியது. குறைந்த நாட்களே விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன'நீட்' என்ற அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இதனால், பலர் இன்ஜி., படிப்புகளுக்கு மனதளவில் தயாராகி, விண்ணப்பித்து விட்டனர். இதனால், நுழைவுத் தேர்வு சிக்கல் தீர்ந்தாலும், மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கவில்லைகடந்த ஆண்டை விட, அனுமதி கிடைத்த தனியார் கல்லுாரிகளின்எண்ணிக்கை குறைந்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும் குறைந்துள்ளனஇந்த, 'கட் ஆப்' மதிப்பெண் வரை தான், இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விண்ணப்பங்கள் குறைந்திருக்கலாம். இதற்காக, மருத்துவப் படிப்பில் ஆர்வம் குறைந்து விட்டதாகக் கருத முடியாது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

பள்ளி வாகன விபத்தை தடுக்க களமிறங்குமா போக்குவரத்து துறை?

தமிழகத்தில், 2,823 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே வராத நிலையில், விபத்துகள் நடக்கத் துவங்கி உள்ளன. பள்ளி வாகன பாதுகாப்பு விஷயத்தில், போக்குவரத்து துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

திருப்பூரை அடுத்த விஜயாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனம், நேற்று, இந்திரா நகர் பகுதியில் சென்ற போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 20 மாணவ, மாணவியர் காயமடைந்தனர்.தமிழகத்தில், 26 ஆயிரத்து, 400 பள்ளி வாகனங்கள் உள்ளன. இவற்றில், 2,823 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே கொண்டு வரப்படவில்லை. இந்த சூழலில் தான், இந்த விபத்தும் நிகழ்ந்திருக்கிறது. இதனால், ஆய்வுக்கு வராத வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறதா என்பதை, போக்குவரத்து துறை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர், கல்வித் துறை அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், பெற்றோர் -- ஆசிரியர் சங்க பிரதிநிதி ஆகியோர் இடம் பெற்ற போக்குவரத்து குழு இருக்க வேண்டும்.இந்த குழு, வாகனம் மற்றும் ஓட்டுனர் உடற்தகுதி நிலை குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளிகள் திறந்து, ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இந்த குழு ஆலோசனைகூட்டம் நடத்தியிருக்க வேண்டும்.ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் போக்கு வரத்து குழுவே அமைக்கவில்லை என்பது தான் தற்போதைய நிலை. இனியாவது போக்குவரத்து துறை விழித்துக் கொண்டு, இவற்றை சரி செய்யவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைமை செயலர் உட்பட 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்.

தமிழக அரசின் தலைமைச் செயலர் உட்பட, எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விவரம்:

ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு பதவிஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர், முதல்வர் அலுவலகத்தில், சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் முதல்வரின், மூன்றாவதுசெயலராக இருந்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கட ரமணன், முதல்வரின், முதல் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.முதன்மை செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின், இரண்டாவது செயலராகவும்; செயலர் விஜயகுமார், முதல்வரின், மூன்றாவது செயலராகவும்; ராமலிங்கம், முதல்வரின், நான்காவது செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஞானதேசிகன், 2014 டிச., 2ம் தேதியில் இருந்து, தலைமை செயலராக இருந்து வந்தார். தற்போது, ராம் மோகன் ராவுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காலத்திற்கேற்ப மாறாத பாடத்திட்டம்

மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், 2011ல், மெட்ரிக், மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் போன்ற பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, அனைவருக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்தது.

அவ்வப்போதுசமச்சீர் கல்வி கமிட்டி பரிந்துரைப்படி, காலத்துக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும். ஆனால், தமிழக அரசு, ஐந்தாண்டுகளுக்கு மேலாக, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவில்லை.இதனால், தமிழக மாணவர்கள், அகில இந்திய அளவில், ஜே.இ.இ., என்ற பொறியியல் படிப்புக்கான ஒருங்கிணைந்தநுழைவுத்தேர்வு;'நீட்' எனப்படும் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வு போன்றவற்றில், போதிய அளவு தேர்ச்சி பெற முடியவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல், அனைத்து மாணவர்களுக்கும், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம், மாநிலங்களுக்கான மாணவர் சேர்க்கைக்குமட்டும், இந்தஆண்டு மட்டும் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, மாநில மாணவர் சேர்க்கைக்கும், நீட் தேர்வு எழுத வேண்டும்.அதேபோல, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை அனைத்து இன்ஜி., கல்லுாரிகளுக்கான பொது நுழைவுத்தேர்வாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இன்ஜி., கல்லுாரிகளுக்கான அங்கீகார கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வு செய்து வருகிறது.ஆய்வு நடக்கிறதுஇதற்கிடையில், பெங்களூரு பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே கூறுகையில்,'பொது நுழைவுத்தேர்வு கொண்டு வருவது குறித்து ஆய்வு நடக்கிறது.அவ்வாறு வரும் போது, அனைத்து மாநிலங்களும், குறிப்பாகநுழைவுத்தேர்வில் இதுவரை பங்கேற்காத மாநிலங்களும், பாடத்திட்டங்களை மாற்றி, தரம் உயர்த்த வேண்டியுள்ளது. இல்லையென்றால், அந்த மாநில மாணவர்களுக்கு, வாய்ப்பு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது' என,தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்,பாடத்திட்டங்களை மாற்றி, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.,க்குஇணையாக, மாநில பள்ளிகளிலும் பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, இப்போதே பாடத்திட்டம் மாற்றுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2015ல், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:

● சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்கள், 5,930 பேர்
● ஆந்திராவில், 793 மாணவர்கள்
● தெலுங்கானாவில், 300 மாணவர்கள்
● மஹாராஷ்டிராவில், 678 பேர்
● தமிழக சமச்சீர் கல்வியில், 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரே நேரத்தில் தேர்தல் ஆணையம் ஆதரவு

நாடு முழுவதும், லோக்சபா மற்றும் மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல்களை, ஒரே சமயத்தில் நடத்தலாம்' என, பார்லி., நிலைக்குழு அளித்த பரிந்துரைக்கு, தேர்தல் கமிஷன் ஆதரவு தெரிவித்து உள்ளது.

கடந்த டிசம்பரில், தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி, ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'நாடு முழுவதும், லோக்சபாதேர்தல் மற்றும் மாநில சட்டசபைகளுக்கானதேர்தல்களை ஒருங்கே நடத்தினால், பணம், நேரம், மனிதசக்தி வெகுவாக மிச்சமாகும்' என, கருத்துதெரிவித்திருந்தார்.இது தொடர்பாக அமைக்கப்பட்ட,பார்லி., நிலைக்குழு அளித்த அறிக்கையில், 'லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்தலாம்' என, பரிந்துரைத்தது. இதுகுறித்து, தேர்தல் கமிஷனின் கருத்தைதெரிவிக்கும் படி, மத்திய சட்ட அமைச்சகம் கோரியிருந்தது.

இந்நிலையில், பார்லி., நிலைக்குழுவின் பரிந்துரைக்கு ஆதரவு அளிப்பதாக, சட்ட அமைச்சகத்திடம்,தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இருப்பினும், இந்த பரிந்துரையை அமல்படுத்துவதில், நிதிசார்ந்த சவால்களும், நடைமுறைச் சிக்கல்களும் ஏற்படும் ஆபத்து இருப்பதாக, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரலில், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஐகோர்ட் தலைமைநீதிபதிகள் பங்கேற்ற கூட்டத்தில்பேசிய பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்து கருத்து கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் பணியை, அக்., மாதம் முதல் துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசி, குறைந்த விலையில் விற்கப்படும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வினியோகத்தில் , முறைகேடு நடக்கிறது.

இதைத் தடுக்க, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதை, அக்., முதல் செயல்படுத்த, உணவுத் துறை காலக்கெடு நிர்ணயித்து உள்ளது.

திட்டம் செயல்படுத்தும் முறை

● அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 'டேப்ளட்' இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என, பெயரிடப்பட்டு உள்ளது
● ரேஷன் கார்டுதாரர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின், 'ஆதார்' அட்டைகளை, ரேஷன் ஊழியரிடம் வழங்க வேண்டும்; அதை, அவர் டேப்ளட் இயந்திரத்தில், 'ஸ்கேன்' செய்து விட்டு, ரேஷன் கார்டுதாரரிடம் திரும்ப வழங்குவார்
● ரேஷன் கார்டுதாரரிடம் மொபைல் எண்ணும் கேட்டு வாங்கப்படும்
● தற்போது, 13 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், டேப்ளட் கருவி வழங்கப்பட்டு உள்ளது; ஜூலை இறுதிக்குள், அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்படும்
● ரேஷன் கடைகளில், செப்., வரை, ஆதார் விவரமும், மொபைல் எண்ணும் வாங்கப்படும்
● ரேஷன் கடையில், ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார் விவரம், உணவுத் துறை அலுவலகத்தின், 'மெயின் சர்வருக்கு' சென்று விடும்
● ஆதார் விவரத்தின் அடிப்படையில், 'கிரெடிட்,டெபிட் கார்டு' வடிவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடப்படும். அந்த கார்டில், தமிழக அரசின் முத்திரை இடம்பெறும்; குடும்பத் தலைவர் புகைப்படம் இடம் பெறவும் வாய்ப்புள்ளது
● ரேஷன் கடை வாயிலாக, மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுவினியோகம் நடக்கும்
● கார்டுதாரர், ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது, ஸ்மார்ட் ரேஷன் கார்டை வழங்கினால், ஊழியர் அதை, பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்தில் ஸ்கேன் செய்த பின், 'பில்' போடுவார்.அந்த விவரம், உடனே கார்டுதாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் செல்லும்; உணவுத் துறை சர்வரிலும்பதிவாகும்.இதன் மூலம், ரேஷன் கடைகளில் முறைகேடு குறைய வாய்ப்பு உள்ளது.இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசு அறிவித்தால், இந்த மாத இறுதிக்குள் அரியலுார், புதுக்கோட்டையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடியும். இருப்பினும், அக்.,மாதம் முதல், ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசின் முடிவை பொறுத்து, திட்டத்தில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வழிகாட்டும் புதுச்சேரி

புதுச்சேரி அரசு, 2011ல், புத்தக வடிவில் இருந்த ரேஷன் கார்டுகளை, ஸ்மார்ட் கார்டு வடிவில்வழங்க முடிவு செய்தது. ஆதார் கார்டுக்கு எடுக்கப்பட்ட புகைப்படம், கண் கருவிழி படம், கைரேகைகள், ஸ்மார்ட் கார்டுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த தகவல்களை சிறிய, 'சிப்' வடிவில் ஏற்படுத்தி, குடும்பத் தலைவர் புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரித்து, மக்களுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரியில், 2.50 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. குடும்பத் தலைவர், தலைவி அல்லது ரேஷன் கார்டு பெயர் வரிசையில் முதலில் உள்ள, இரண்டு நபர்களில் யாரேனும் ஒருவர் ரேஷன் கடைக்கு சென்று ஸ்மார்ட் கார்டு வழங்கினால், அங்கு கையடக்க, பி.ஓ.எஸ்., என்ற, 'பாயின்ட் சேல் டிவைஸ்' என்ற இயந்திரத்தில் செருகி, குடும்ப உறுப்பினரின் கைரேகை பதிவு செய்த உடன், பொருட்கள் வழங்கியதற்கான ரசீது வழங்கப்படும். இந்த திட்டத்தில், சில மாறுதல்களை செய்து, தமிழகத்தில் செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.