Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 8 July 2016

பெண் கல்வி; பின்னுக்கு செல்லும் வடமாநிலங்கள்

வட மாநிலங்களில் பெண் குழந்தைகளின் கல்வி சதவீதம் குறைவாக உள்ளதாக புள்ளி விபர ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2014ம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, கல்வி நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 21 முக்கிய மாநிலங்களில் குஜராத் 
20வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 21 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில்15 முதல் 17 வயதிற்குற்பட்ட சுமார் 26.6 சதவீதம் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதவர்களாகவோ அல்லது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களாகவோ உள்ளனர்.

பீகாரில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 83.3 சதவீதமாகவும், அசாமில் 84.8 சதவீதமாகவும், ஜார்கண்டில் 84.1 சதவீதமாகவும், சட்டீஸ்கரில் 90.1 சதவீதமாகவும், ம.பி.,யில் 79.2 சதவீதமாகவும், உ.பி.,யில் 79.4 சதவீதமாகவும், ஒடிசாவில் 75.3 சதவீதமாகவும் உள்ளன. அதே சமயம் குஜராத்தில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 73.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 72.1 சதவீதமாகவும் உள்ளன.

ஓய்வூதியம் பெறுபவர்கள் வங்கி கணக்கு துவக்குவதுகட்டாயம்:தபால் அலுவலகம் மூலம் பணம் இனி கிடைக்காது

ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி கட்டாயம் வங்கிக்கணக்கு துவங்கி இருந்தால் மட்டுமே, அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். தபால் அலுவலகம் மூலம் வழங்கும் சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், ஏழை, எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள, பல உதவி 
திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம், 1லட்சத்து, 14 ஆயிரத்து, 421 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் முதியோர் உதவி தொகையான, 1,000 ரூபாய் இதற்கு முன் தபால் நிலையத்தில் இருந்து அவரவர் வீட்டு முகவரிக்கு வழங்கப்பட்டது.

வாரிசுகளால் கைவிடப்பட்டு, வறுமையில் வாடும் முதியோர்களுக்கு இந்த தொகை பயனுள்ளதாக உள்ளது. இதை நம்பி பலர் வாழ்கின்றனர். ஏற்கனவே, முதியோர் உதவித்தொகை பெறுவோர், மற்றும் புதியதாக உதவித்தொகை கேட்டு மனுக்கள் கொடுத்துள்ளவர்களுக்கு, நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள வங்கியில் கணக்கு துவக்கி அதற்கான சேமிப்பு கணக்கு எண்ணை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு உதவி தொகை கிடைக்கும் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால், ஓய்வூதியதாரர்களுக்கு அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் மனு கொடுப்போருக்கும், உதவி தொகை வரவில்லை என, கேட்டு வருவோருக்கும் வங்கி கணக்கு துவங்கி அதற்கான எண் கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தி வருகின்றனர்.இதற்கு முன், பயனாளிகள் வீட்டு விலாசத்திற்கு பணம் தபால் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் அவர்கள் வங்கி கணக்கு துவங்கி அதன் மூலம் பணம் எடுத்து கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது.இதனால் ஓய்வூதியம் பெறுபவர்கள் நகர் பகுதியில் வங்கியில் கணக்கு துவங்க அலைந்து வருகின்றனர். கிராம பகுதியில் வங்கி பணியாளர்கள் அதற்கான வேலைகள் செய்து வருகின்றனர்.

மத்திய அரசு வழங்கும் ஓய்வூதிய திட்டம்

இந்திரா முதியோர் ஓய்வூதிய திட்டம்

இந்திரா ஆதரவற்ற விதவை திட்டம்

இந்திரா மாற்றுத் திறனாளி நிதி உதவி திட்டம்

மாநில அரசு ஓய்வூதிய திட்டம்

ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம்

ஆதரவற்ற மாற்றுத் திறனாளி நிதி உதவி திட்டம்

கணவனால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவி திட்டம்

முதல்வர் ஓய்வூதிய திட்டம்

திருமணமாக பெண்கள் ஓய்வூதிய திட்டம்இவை போன்ற திட்டங்கள், மத்திய, மாநில அளவில் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பயன் பெறும்

ஒவ்வொருவருக்கும் மாதம் தலா, 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.

வங்கி கணக்கு இருந்தால் மட்டுமே ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் என, அரசு எங்களுக்கு கடந்த மாதம் முதல் உத்தரவிட்டுள்ளது. இனி, வங்கி கணக்கு இல்லாமல் ஓய்வூதியம் வழங்கப்படாது. தபால் அலுவலகத்தில் பணம் கொடுப்பதை நிறுத்த சொல்லி விட்டோம். வங்கி மூலம் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்.மாவட்ட அதிகாரி ஒருவர், காஞ்சிபுரம்.

கல்வியாளர்கள் சங்கமம்...ஆசிரியர்களால்....மாணவர்களுக்காக....நாளை ஆரம்பம்...

அரசு பள்ளிகளில் காலியிடங்கள்: 1,250 சிறப்பாசிரியர்கள் நியமனம் எப்போது?- 2 ஆண்டு கடந்தும் நடவடிக்கை இல்லை

அரசு பள்ளிகளில் போட்டித்தேர்வு மூலமாக சிறப்பாசிரியர்களை நிய மிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வரு கிறார்கள்.

முன்பு இவர்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலம் நியமிக்கப் பட்டு வந்தனர். ஆரம்பத்தில் மாவட்ட அளவிலான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டது.இந்த நிலையில், சிறப்பாசிரியர் களை பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று ஓர் உத்தர வைப் பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பாசிரி யர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, எழுத்துத்தேர்வு நேர்முகத்தேர்வு அடிப்படையில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் வகையில் கடந்த 17.11.2014 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டது. அதன்படி, தேர்வுக்கு மொத்தம் 100மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. அதில் 95 மதிப்பெண் எழுத்துத் தேர்வுக்கும். எஞ்சிய 5 மதிப்பெண், உயர் கல்வித்தகுதி, அனுபவம், என்சிசி, என்எஸ்எஸ் உள்ளிட்ட இதர செயல்பாடு ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே, சிறப்பாசிரியர் நேரடி நியமன அரசாணையை தொடர்ந்து, 440 உடற்கல்வி ஆசிரியர், 196 ஓவிய ஆசிரியர்,137 தையல் ஆசிரியர், 9 இசை ஆசிரியர் என மொத்தம் 782 சிறப்பாசிரியர் பணி காலியிடங்களை மாநில பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கும் வகையில் கடந்த 8.5.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாபஸ் பெற்றது. அந்த அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட இருந்த 782 காலியிடங்கள் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும். அந்த காலியிடங்களையும் 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 கல்வி ஆண்டுகளில் உருவான காலியிடங்கள் என ஏறத்தாழ 1,250 இடங்களை நிரப்பும் வகையில் பள்ளிக்கல்வித்துறை காலியிடங்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமிக்க அரசு முடிவெடுத்திருப்பதால் தையல், ஓவியம், இசை உள்ளிட்டபாடங்களில் தொழில்கல்வி ஆசிரியர் சான்றிதழ் (டிடிசி) பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நேரடி நியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்ட தால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே, அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 15 ஆயிரம் பகுதி நேரசிறப்பாசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.

வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்;

தவறுகளை களைய வேண்டும்; ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் நீக்க வேண்டும்; இடம் மாறி சென்றவர், இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்; புகைப்படம் தெளிவானதாக இருக்க வேண்டும்; பெயர், குடும்ப விபரம், முகவரி சரியாக இருக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே பெயரில் உள்ள வாக்காளர்கள், தனியே பிரிக்கப்படுகின்றனர்.

இதுவரை, 70 லட்சம் வாக்காளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தந்தை பெயர், புகைப்படம் ஆகியவை ஒப்பிடப்படுகிறது. அப்போது, ஒரே நபரின் பெயர், பல இடங்களில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் விபரம் தனியே பட்டியலிடப்படுகிறது. அதேபோல், முகவரி மாறி சென்றவர்கள், இறந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இப்பட்டியல்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், வரும், 15ம் தேதி ஒப்படைக்கப்படும்.

அவர்கள் வீடு வீடாகச் சென்று, அப்பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்துவர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பெயர் இருப்பது உறுதியானால், வாக்காளர் விரும்பும் இடம் தவிர, மற்ற இடங்களில் பெயரை நீக்குவர்.

துணைவேந்தர்கள் இல்லாத முப்பெரும் பல்கலைக்கழகங்கள்: முடங்கும் உயர்கல்வி!!!

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் பெருமைப்படும் வேளையில், தமிழகத்தில் உயர்கல்வி முற்றிலுமாக முடங்கும் ஆபத்து
ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூன்று பெரிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளும் காலியாக 
கிடப்பது தான் இதற்குக் காரணம் ஆகும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

ஒரு மாநிலம் அறிவுசார் பிராந்தியமாகவும்,  ஆராய்ச்சியில் சிறந்ததாகவும் மாற வேண்டுமானால், அந்த மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் திறமையான கல்வியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் கல்வியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாமல், அப்பதவியை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு காசு பலம் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் தங்களின் விரல் அசைவுக்கு வளைந்து ஆடுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். இத்தகைய ஆட்களுக்காக ஆட்சியாளர்கள் காத்திருப்பது தான் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பதற்கு காரணமாகும்.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தாண்டவன் கடந்த ஜனவரி 10-ஆம் தேதியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் கடந்த 09.04.2015 தேதியும் ஓய்வு பெற்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இராஜாராமின் பணிக் காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. இந்த மூன்று பல்கலைக்கழகங்கள் தான் தமிழகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் ஆகும். இவற்றில் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மட்டும் 129 கல்லூரிகளும், 52 ஆராய்ச்சி நிறுவனங்களும், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளுகையில் 550 கல்லூரிகளும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் 82 கல்லூரிகள் மற்றும் 18 ஆராய்ச்சி நிறுவனங்களும் உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் உள்ள சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 6 மாதங்களாக காலியாக உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 15 மாதங்களாக நிரப்பப்படவில்லை. இந்திய வரலாற்றில் எந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியும் இவ்வளவு அதிக காலம் காலியாக கிடந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சென்னை பல்கலை. துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் அதன் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கி விட்டன. ஆராய்ச்சிப் பணிகளுக்காக பல்கலைக்கழக மானியக்குழு ஒதுக்கிய ரூ.8 கோடி  நிதி செலவிடப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாததால் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சிப்படிப்பு வரை முடித்த அனைவரும் பட்டங்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். பலருக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை கிடைத்தாலும், இன்னும் பட்டம் கிடைக்காததால் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய பேராசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்படாததால் அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது.
காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 15 மாதங்களும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 7 மாதங்களும் ஆகிவிட்ட போதிலும் இதுவரை முன்னேற்றம் இல்லை. இரு பல்கலை.களுக்கும் ஏற்கனவே துணைவேந்தர்களாக இருந்து பல்வேறு குற்றச்சாற்றுக்கு உள்ளானவர்களை நியமிக்க ஆட்சியாளர்கள் விரும்புவதாகவும், அதனால் தான் இந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்கள் தாமதமாவதாகவும் புகார் எழுந்துள்ளன. இந்த புகார்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தமிழக அரசோ மவுனம் கடைபிடிக்கிறது.

துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது ஒருபுறமிருக்க தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதவியும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காலியாக கிடக்கிறது. உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த அபூர்வா, கடந்த மாதம் 16 ஆம் தேதி மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். அதன்பின்னர் உயர்கல்வித்துறைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்படவில்லை. மாறாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் இப்பதவியை கூடுதல் பணியாக கவனித்து வருகிறார். இதனால் உயர்கல்வித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 3 ஆண்டுகளுக்கு முன் 17.08.2013 அன்று சென்னைப் பல்கலைக்கழக 155-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசும்போது,‘‘பல்கலைக்கழக கல்வியின் உலக மையமாக தமிழகத்தை உருவாக்க பாடுபட்டுவருகிறேன்’’ என்று கூறினார். உயர்கல்வித்துறை செயலாளர் பதவியையும், 3 பெரிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளையும் காலியாக வைத்திருப்பது தான் தமிழகத்தை உயர்கல்வியின் உலக மையமாக மாற்றும் லட்சனமா? என்பதை ஜெயலலிதா தான் விளக்க வேண்டும். இந்த விஷயத்தில் இனியும் தூங்கி வழியாமல் உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை தகுதியும், திறமையும் கொண்டவர்களைக் கொண்டு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சிறுசேமிப்புக்கு வட்டி அஞ்சல் துறை புதிய அறிவிப்பு.

அஞ்சலக சிறுசேமிப்புக்கான வட்டி விகிதங்கள் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்.இது தொடர்பாக மத்திய பத்தி ரிகை தகவல் அலுவலகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங் களுக்கான வட்டி விகிதங்கள் 2016-17 நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். சிறு சேமிப்பு திட்டத்துக்கான தற்போது நடைமுறையிலுள்ள வட்டி விகிதங் களே நடப்பு 3 மாத காலத்துக்கு அதாவது 30.09.2016 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு அதிகபடி யாக 8.6 சதவீத வட்டி கொடுக்கப் படுகிறது. பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்டத்தில் 8.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதற்குமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கு மாறு மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"தினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”! ஆனால் நாட்டுக்கோழி முட்டை மட்டும்தான் ஏற்புடையது"

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய் நொடி எதுவும் அண்டாது என்று கூறப்படுகிறது. தாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டீன் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான். இதில் எக்கசக்க ஊட்டச்சத்துகள் உள்ளன. புரோட்டீன்
தவிர்த்து முட்டையில் வைட்டமின்கள், மினரல்களும் உள்ளன. ஒரு முட்டையில் 70 முதல் 100 கலோரி வரை உள்ளது. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளது.
ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.
இது மட்டுமா முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.
மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 உள்ளது.
முட்டை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது. தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு கண்புரை வரும் வாய்ப்பு மிகக் குறைவே ஆகும். மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயத்திற்கு சிறந்தது முட்டை.
மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கொண்டது முட்டை. வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 44 சதவீதம் குறைவு என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முட்டையில் உள்ள சல்பர், வைட்டமின்கள், மினரல்கள் நகம் மற்றும் முடிக்கு நல்லது.
இத்தனை குணநலன்கள் உள்ள முட்டையை பச்சையாக குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் கொழுப்புச் சத்துள்ளவர்கள் அதை தவிர்க்கவும்.
முட்டையின் முழு குணநலன்களையும் அடைய வேண்டுமானால் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டையும் உண்ண வேண்டும்.
மேலும்
முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.
“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.
அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.
முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.
முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.
முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.
முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.
வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.
பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .
-நன்றி: Haroon Health

இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!

இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரமும், அணுவியல் நேரமும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம்.

அதனால் பூமியின் மெதுவான சுழற்சியால் ஏற்படும் தாமதத்தை சர்வதேச நேரத்தில் சேர்க்கிறார்கள்.ஆனால் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 மில்லி விநாடிகள் மெதுவாகச் சுழல்கிறது. இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் அடிப்படையிலான நேரத்துக்கும், துல்லியமான அணுவியல் கடிகார நேரத்துக்கும் சுமார் ஒரு விநாடி வேறுபாடு காணப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவு 11 மணி 59 நிமிடம், 59-ஆவது விநாடிக்குப் பிறகு கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க முடிவு செய்துள்ளது  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!

இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரமும், அணுவியல் நேரமும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம்.

அதனால் பூமியின் மெதுவான சுழற்சியால் ஏற்படும் தாமதத்தை சர்வதேச நேரத்தில் சேர்க்கிறார்கள்.ஆனால் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 மில்லி விநாடிகள் மெதுவாகச் சுழல்கிறது. இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் அடிப்படையிலான நேரத்துக்கும், துல்லியமான அணுவியல் கடிகார நேரத்துக்கும் சுமார் ஒரு விநாடி வேறுபாடு காணப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவு 11 மணி 59 நிமிடம், 59-ஆவது விநாடிக்குப் பிறகு கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க முடிவு செய்துள்ளது  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.