Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 24 July 2016

கல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரியர்கள்.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். 

             தமிழகத்தின் பல மாவட்டங்களில், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறை இக் காலியிடங்களை நிரப்ப, 2014ம் ஆண்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் எழுதினர். தேர்வு எழுதி ஓராண்டு ஆனபின், கடந்த ஆண்டு, மே மாதம் தேர்வு முடிவு வெளியானது. இதில், 3,000 ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர். அடுத்த கட்டமாக இவர்கள் கடந்த ஆக., மாதம், சென்னையில் முதன்மைத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதி முடித்து, ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை. இந்த தேர்வு முடிவை எதிர்பார்த்து, 3,000 ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர். இதுகுறித்து தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் விரைவாக முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். தேர்வானவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி, பல மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால் தொடுதிரை மூலம் பாடம் கற்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்: ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வசதியால் உற்சாகம்

இந்திய அளவில் ஆங்கில மொழித் திறன் தொடர்பான போட்டியில் கலந்துகொண்டு பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்ற திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளிக்கு ‘தி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால், தற்போது தொடுதிரை மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

திருவாரூர் மாவட்டம் நீடாமங் கலம் அருகே உள்ள காளாச் சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை 142 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்த ஆனந்த், மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலத்தை செயல் விளக்கத்துடன் கற்பித்து வருகிறார். இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த அரசுப் பள்ளியில் ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர்.

இப்பள்ளி மாணவர்கள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ என்ற போட்டியில் கலந்துகொண்டு, தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதல் பரிசைப் பெற்று அதற்கான விருதையும் வென்றுள்ளனர். அதேபோல, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற, ஆங்கிலப் பேச்சு மற்றும் செயல்திறன் போட் டியில் கலந்துகொண்டு ‘ஸ்பிரிட் ஆப் கம்யூனிட்டி’ என்ற விருதை யும் பெற்றனர்.

இது தொடர்பாக, ‘தி இந்து’ நாளிதழில், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி செய்தி வெளியானது. மேலும், ‘தி இந்து’ ஆன்லைன் பகுதியில் அன்பாசிரியர் என்ற தொடரில், ‘உளவியல் ஊக்கம் தரும் ஆசான்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், இப்பள் ளியின் ஆசிரியர் ஆனந்த், தன்னுடைய மாணவர்களின் திறமைகள் குறித்து வெளிப்படுத்தி யிருந்தார். இவற்றைப் படித்த ‘தி இந்து’ வாசகர்கள், காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பொருளு தவிகளைச் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் ஆனந்த் கூறியபோது, “எங்கள் பள்ளி தொடர்பாக ‘தி இந்து’வில் வெளியான செய்தியைப் படித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள சோமநாதன் என்பவர் மாணவர்களுக்காக ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள லேப்-டாப்பை அனுப்பிவைத்தார். வகுப்பறை ஒன்றில் ரூ.31 ஆயிரம் மதிப்பில் 400 சதுர அடி பரப்பளவில் அவரே டைல்ஸ் பதித்துக் கொடுத்தார்.

கத்தாரில் உள்ள சுரேஷ் என்ப வர் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள தொடுதிரை (டச் ஸ்கீரின்) வழங்கி னார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ராமசேஷன், ரமேஷ் ஆகியோர் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள புரொ ஜெக்டரை வழங்கினர். தஞ்சாவூர் அகம் அறக்கட்டளையினர் ரூ.20 ஆயிரம் மதிப்பில் செயல்வழிக் கற்றல் வகுப்புக்காக மேஜை களையும், நாற்காலிகளையும் வழங்கினர். தஞ்சாவூரில் காவல் துறையில் பணியாற்றும் திராவிட மணி, ரூ.2,500 மதிப்புள்ள மார்க்கர் போர்டை வழங்கினார். வேலூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அனுப்பி வைத்துள்ளார்.

‘தி இந்து’ வாசகர்களின் பொ ரு ளுதவியால், எங்கள் பள்ளி மாணவர்கள் நவீன வகுப்பறையில், இதர ஆங்கிலப் பள்ளி மாணவர் களுடன் போட்டியிடும் அளவுக்கு படிப்பில் அக்கறை செலுத்தி வருகின்றனர்” என்றார்.

தமிழ்நாடு அறிவியல் கழகம் சார்பில் மாணவர்களுக்கான புத்தகங்கள்



புத்தகங்கள்

அரசின் விலையில்லா திட்டங்களால் 14.80 லட்சம் மாணவர்கள் பயன்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தி வரும் விலையில்லா திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் கடந்தாண்டில் 14 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து தலைமை ஆசிரியர் காயம்

 திருவண்ணாமலை; பைக்கில் சென்ற தலைமை ஆசிரியர் மீது, திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.

அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு

தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.

        தமிழகம் முழுவதும், 23 ஆயிரத்து 815 தொடக்கப்பள்ளிகள் மற்றும், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, எ.பி.எல்., எனப்படும் செயல்வழி கற்றல் அட்டை மூலம், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஆசிரியர்களுக்கே அதிக எழுத்துப்பணி இருக்கும்.
இதனால், மாணவர்களின், எழுத்து, வாசிப்பு திறன் மற்றும் கணிதத்தில் எளிய கூட்டல், கழித்தல் முறைகளை பின்பற்றுவதில், பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இது, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில், தேர்வை எதிர்கொள்ளுதல், தேசிய திறனாய்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்க தடையாக இருப்பதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த, தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி, பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி, கடந்தாண்டில் கோவை மாவட்டத்தில், 1,300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடந்தது.
இதில், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன், 35 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. பின், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி அளித்து, கற்றல் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
நடப்பாண்டில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில், முதற்கட்ட ஆய்வில், 650 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் இறுதி வரை, மாணவர்களுக்கு எளிய பயிற்சிகள், தேர்வுகள் நடத்தி, கற்றல் திறன் குறித்து, அறிக்கை தயாரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்,''கோவை மாவட்டத்தில், மொத்தமுள்ள, 15 வள மையங்களில் பணிபுரியும், ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதிக்கப்படும். எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வார்த்தைகள் எழுதுதல், எளிய கணித முறைகளில், அடிப்படை திறன் ஆய்வு செய்யப்படும். இதன் முடிவுகள், செப்டம்பர் மாதத்திற்குள் தயாரித்து, அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்,'' என்றார்.

இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்.,பட்டதாரிகளுக்கு ஊக்க ஊதியம்


விடுமுறைக்கு விடுமுறை விட்ட தலைமையாசிரியர்!!!


எம்.இ., - எம்.டெக்., 'அட்மிஷன்' அண்ணா பல்கலை அறிவிப்பு

இன்ஜினியரிங் முதுநிலை படிப்பான, எம்.இ., - எம்.டெக்., போன்றவற்றில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. இன்ஜி., கல்லுாரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, 'டான்செட்' எனப்படும், பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வின் படி, மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. ஜூலை, 31 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.அண்ணா பல்கலையின், www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 'எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

முதுநிலை கணிதப் படிப்பு படிப்போருக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, வரும், 29ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தேசிய உயர்கல்வி கணித வாரியம் சார்பில், கணிதப் படிப்புகளை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி.,யின் கணித பிரிவு படிப்போருக்கான உதவித்தொகைபெற விண்ணப்பங்கள் அனுப்ப, 29ம் தேதி கடைசி நாள் என, கணித வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்., 17ல் உதவித்தொகை பெறுவோருக்கான தேர்வு நடக்கிறது. இதற்கான கூடுதல் தகவல்களை,http://www.nbhm.dae.gov.inஎன்ற இணையதளத்தில் அறியலாம்.

பிற மாநில மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில் இடம்

அண்ணா பல்கலையின்  கல்லுாரிகளில், பிற மாநில மாணவர்களுக்கு, 48 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதற்கான, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலையின் துறை கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., மற்றும் 'ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்' ஆகியவற்றில், சில இடங்கள் மட்டும், வெளி மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம், 48 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதில், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகியவற்றில், தலா, 17 இடங்கள்; 'ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்' கல்லுாரியில், இரு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான, 'ரேங்க்' பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதேபோல், கல்லுாரிகளில் ஒதுக்கப்பட உள்ள பாடப்பிரிவு பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

இன்று இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு : 4.7 லட்சம் பேர் விண்ணப்பம்

ம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான, 'நீட்' தேர்வு, இன்று இரண்டாம் கட்டமாக நடக்கிறது; 4.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். 'அனைத்து மருத்துவ படிப்புகளிலும் சேருவதற்கு, மத்திய அரசின், 'நீட்' தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதில் ஏற்கனவே, 'நீட்' தேர்வை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.

'அப்ஜெக்டிவ்' வினாக்கள் :

அதேநேரம், 'அனைத்து மாநிலங்களிலும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைகளின் மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது; மத்திய அரசும் இதை ஏற்றது.ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் வழக்கமான, 'நீட்' தேர்வு, ஏற்கனவே மே மாதம் நடந்து முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, இந்த ஆண்டு இரண்டாம் கட்டமாக, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், நாடு முழுவதும், 4.7 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், 5,000க்கும் குறைவான மாணவர்கள் தான், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், 180 ஒரு மதிப்பெண்களுக்கான, 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

தேர்வு முடிவுகள் :

'நீட்' முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வுகளின் விடைத்தாள் நகல், ஆக., 4 முதல், 6 வரையிலும்;விடைக்குறிப்புகள், ஆக., 7 முதல், 9 வரையிலும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியாகும். தேர்வு முடிவுகள், ஆக., 17ல் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ பல்கலை மற்றும் கல்லுாரிகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் உட்பட, 14 மாநிலங்களில் உள்ள கல்லுாரிகளில், 'நீட்' தேர்வு இல்லாமல், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மற்ற மாநிலங்கள் தேர்வு முடிவுப்படி மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும், மத்தியஅரசின், 15 சதவீதமான, 40 ஆயிரம் இடங்கள் இந்த தேர்வு முடிவுப்படியே நிரப்பப்படும். தமிழக மருத்துவ கல்லுாரிகளிலும், 15 சதவீத மத்திய அரசு இடங்கள், 'நீட்' மதிப்பெண் படியே நிரப்பப்பட உள்ளன.

'பேனா, வாட்ச்' மூக்குத்திக்கு தடை -மெட்டல் டிடெக்டர் சோதனை :

'நீட்' தேர்வில் முறைகேட்டை தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு தேர்வு அறையிலேயே பேனா வழங்கப்படும். 'வாட்ச், ஷூ, சாக்ஸ்' மூக்குத்தி, காது வளையம், கழுத்து செயின், தலைமுடி 'கிளிப்' உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து செல்லக்கூடாது. கால்குலேட்டர், மொபைல் போன் கொண்டு செல்லக்கூடாது. தேர்வு மையங்களில், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படும். ஒவ்வொரு தேர்வு அறையிலும், இரு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுவர்.

லோக்சபாவில் பட்டதாரிகளுக்கு பயிற்சி விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அறிவிப்பு

லோக்சபாவில், பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கான கள பயிற்சியான, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சியை பெற விண்ணப்பம் அளிக்கலாம்' என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை வந்துள்ளது.லோக்சபாவில், மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு, மாத ஊக்க ஊதியத்துடன் கூடிய, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி வழங்கப்படுகிறது.
'இந்த ஆண்டுக்கான பயிற்சிக்கு, கல்லுாரி முதல்வர்களின் கடிதம் பெற்று, லோக்சபா சபாநாயகரின் இணை செயலருக்கு அனுப்பலாம்' என, கல்லுாரிகளுக்கு லோக்சபா சபாநாயகர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.விண்ணப்பங்களை, 'இயக்குனர், பீரோ ஆப் பார்லிமென்ட் ஸ்டடிஸ் அண்டு டிரெய்னிங், லோக்சபா செயலகம், அறை எண், எப்.0706, பார்லிமென்ட் நுாலக கட்டடம், புதுடில்லி - 110001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மூன்று மாத, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்கு மாதம், 20 ஆயிரம் ரூபாய்; ஒரு மாத பயிற்சிக்கு, 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.நிதி, நிர்வாகம், மொழி, சட்டம், சுற்றுச்சூழல், சமூக அறிவியல் உள்ளிட்ட, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் முடித்து, 30 வயதுக்கு உட்பட்டவர்கள், மூன்று மாத பயிற்சியில் சேரலாம்.

டிச., 1 முதல், பிப்., 28 வரை பயிற்சி நாட்கள்.ஒரு மாத, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்கு, 18 வயதில் இருந்து,30 வயதுக்குள் இருக்கலாம். கல்லுாரி மாணவர் அல்லது பட்டம் முடித்து முதுநிலை படிப்புக்கு விண்ணப்பித்திருக்கலாம்.டிச., 14 முதல் ஜன., 13 வரை பயிற்சி நாட்கள். எம்.பி.,க்களிடம் பேசவும், பார்லிமென்ட் பணிகளில் பங்கேற்கவும் இந்த பயிற்சியில் வாய்ப்பு தரப்படுகிறது.இரண்டு வித பயிற்சியிலும், தலா, 25 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.

பி.ஆர்க்., படிப்புக்கு 26ல் கவுன்சிலிங் அதிகபட்ச 'கட் - ஆப்' 293 ஆக நிர்ணயம்

பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 26ல் நடக்கிறது.'ஆர்கிடெக்ட்' என்ற கட்டட வடிவமைப்பு தொடர்பான இன்ஜி., படிப்பு, பி.ஆர்க்., என்ற பெயரில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளின், 2,800 இடங்களில், 1,800 இடங்கள், தமிழக அரசின், ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் அட்மிஷன் பெற, 2,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 'நாட்டா' என்ற தேசிய ஆர்கிடெக்ட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வை எழுதாத, 181 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.பி.ஆர்க்., கவுன்சிலிங், வரும் 26ல் நடக்கிறது. காலை 7:30 மணிக்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள்; காலை 9:00 மணி முதல், மற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஒரே நாளில், அனைத்து இடங்களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.இந்த ஆண்டு பி.ஆர்க்., படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில், 293, 'கட் - ஆப்' மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 'நாட்டா' தேர்வு மதிப்பெண்ணில், 200க்கு எடுத்த மதிப்பெண்ணும்; பிளஸ் 2 மொத்த மதிப்பெண்ணை, 200க்கு எவ்வளவு என மாற்றி, இரண்டையும் மொத்தம், 400 மதிப்பெண்களுக்கு மாற்றி, 'கட் - ஆப்' மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படுகிறது

ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் 903 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு முதன்மைசெயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்., 23ல் முடிகிறது.

அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள் உள்ளதால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்க புதிய பணியிடங்களை ஏற்படுத்தஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அரசை கேட்டு கொண்டார். அதை ஏற்று ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், கணினி இயக்குபவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர்,கணினி இயக்குபவர், ஊராட்சி ஒன்றியங்களில் உதவியாளர், கணினி இயக்குபவர் பணியிடங்கள் 903 ஏற்படுத்தப்படுகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர்கள் அவர்களுக்கு சம்பளம் மற்றும் படிகளுக்கான பட்டியல் தயாரித்து ஏற்பளிப்பு வழங்கவும் அதிகாரமளிக்கப்படுகிறது என அரசு முதன்மை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிக்கு நாளை முதல் 2ம் கட்ட விண்ணப்பம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பான, டி.டி.எட்., டிப்ளமோ படிப்பில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையில்பாடம் எடுக்கும் ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2 முடித்து டி.டி.எட்., படித்திருந்தால் போதும்.

தமிழகத்தில், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கட்டுப்பாட்டில், 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 13 ஆயிரத்து, 800 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. அதில், 3,500 பேர் விண்ணப்பித்து, 1,000க்கும் குறைவானவர்களே இப்படிப்பில் சேர்ந்தனர். காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

பிளஸ் 2 சிறப்பு உடனடி துணைத் தேர்வு முடிவுகள், இரு தினங்களுக்கு முன் வெளியான நிலையில், டிப்ளமோ படிப்பில் சேர உள்ள மாணவர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.வரும், 8ம் தேதி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நடக்கும். 'விண்ணப்பங்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கிடைக்கும்' என, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!' : பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால், அங்கீகாரம் கிடையாது' என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர, பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.

கடந்த கல்வி ஆண்டுக்கு முன் வரை, இந்த படிப்பு, ஓராண்டு காலமாக நடத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசின் புதிய பாடத்திட்டத்தின் படி, கடந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் பல கல்லுாரிகளில், எம்.எட்., படிப்பும் நடத்தப்படுகிறது.'இரண்டு ஆண்டு படிப்புகளை நடத்தும் வகையில், பல கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை; நிரந்தரகல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் கலைச்செல்வன் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம். கல்லுாரிகளில், இரண்டு பிரிவு வகுப்புகள் என்றால், தலா, 50 மாணவர் வீதம், இரு ஆண்டுகளுக்கு, 200 மாணவர்களை சேர்க்கலாம். இதற்கு, 16 ஆசிரியர்கள் கண்டிப்பாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், ஒரு பிரிவு வகுப்பு என்றால், 50 மாணவர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு, 100 மாணவர்களை சேர்க்கலாம். இந்த கல்லுாரிகளில், எட்டு பேர் நிரந்தர ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.இந்த ஆசிரியர்களின் பட்டியலை, பல்கலையில் ஆவணங்களுடன் அளித்தால் மட்டுமே, கல்லுாரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை.

புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

''மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர்டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய கல்விக் கொள்கை தொடர்பான 200 பக்க அறிக்கையை அளித்துள்ளது.5 பேர் கொண்ட இக்குழுவில் ஒருவர் மட்டுமே கல்வியாளர் என்பது கவனிக்கத்தக்கது. இக்குழு பரிந்துரைத்துள்ள பல அம்சங்கள் விவாதத்துக்கு உரியவை. பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது.4-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி என்பதை அமல்படுத்தினால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமற்று கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

உலகிலேயே கல்வியில் முதலிடத்தில் உள்ள பின்லாந்து நாட்டில் 7 வயதில் தான் கல்வி தொடங்குகிறது. 16 வயது வரை 9 ஆண்டுகளுக்கு தேர்வு இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது நலம்.ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால் தொழில் பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் உள்ளது. மறைமுகமாக குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில் தொழில் கல்வியை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதே நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.கல்வி நிர்வாகப் பணிக்கு இந்திய கல்விப் பணித் தேர்வு வைக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது. இதன்படி கல்வித் துறை இயக்குநர்களை மாநில அரசு நேரடியாக நியமிக்க முடியாது.பிளஸ் 2 முடித்தவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்மூலம் பாடத் திட்டங்களை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம் இந்தியாவின் அடிப்படைகூறான பன்முகம் சிதைவுறும்.வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும். வெளிநாடுகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றால் அதுபோன்ற கல்வியை இந்தியாவிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் லைசென்ஸ் அல்லது சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதி லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைஆசிரியர்கள் பயிற்சி பெற வேண்டும் போன்ற பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது. இது ஆசிரியர்களிடம் ஒருவித இயந்திரத் தன்மையை தோற்றுவிப்பதோடு, காலப்போக்கில் சலிப்பு, விரக்தியை ஏற்படுத்தும்.தற்போது வகுக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வெளிப்படைத் தன்மையோடும், ஜனநாயக அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை. கடந்த 2015-ல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாத தலைப்புகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது.

அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் எதுவும் வரவில்லை. திரட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்துக்களை தொகுத்து சுப்பிரமணியன் குழு அறிக்கை அளித்துள்ளது.அந்த அறிக்கையையும் மத்திய அரசு வெளியிட மறுக்கிறது. இவ்வாறு ரகசியாக கல்விக் கொள்கையை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியிருப்பதில்ஆழ்ந்த பொருள் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை நவீன குலக்கல்வித் திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.கல்விக் கொள்கையை வரையறுக்க கல்வியாளர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். அக்குழுவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கல்வியாளர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இக்குழு அறிக்கை நாட்டு மக்கள் முன்பு வைக்கப்பட்டு, மக்கள் கருத்து அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்தத் தீர்மானத்தில், கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற வேண்டும்.புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. தமிழகத்துக்கு சிறிதும் பொருந்தாத இந்தப் பிரச்சினையை முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கையோடு கையாண்டு, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.