Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 9 October 2016

பிஎஸ்சி (அக்ரி) படிப்பு - அட்மிஷனுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்துறை கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசித் தேதி

ஆகஸ்ட் 3௦-ஆம் தேதியோடு நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் நிரப்பப்பட்ட இடங்களை தவிர மீதமுள்ள இடங்களையும் நிரப்புவதற்கு 
வேளாண்மை கல்லூரிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் கூறியதாவது: 2௦16ஆம் ஆண்டுக்கான வேளாண்துறை படிப்புக்குக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதி ஆகஸ்ட் 3௦ஆம் தேதியோடு முடிந்தது. இந்நிலையில் நிரப்பட்ட இடங்களை தவிர விவசாயப் படிப்புக்குக் காலியாக உள்ள இடங்களின் சேர்க்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவர்கள் சேர்க்கைக்கு கடைசி தேதி முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

10 கோடி ரூபாய், திரும்ப கிடைக்குமா என்று, வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு ???

உள்ளாட்சி தேர்தல் ரத்தாகி உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்த, 4.97 லட்சம் பேரிடம் இருந்து, கட்டணமாக பெறப்பட்ட, 10 கோடி ரூபாய், திரும்ப கிடைக்குமா என்று, வேட்பாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
'தமிழக உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ம் தேதிகளில் நடத்தப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

4.97 லட்சம் பேர் : இதற்கான மனு தாக்கல், செப்., 26ல், துவங்கி, அக்., 3ல் நிறைவடைந்தது. உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட மொத்தம், நான்கு லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களிடம், பதவி யின் தன்மைக்கேற்ப, கட்டணமாக, 100 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை, மொத்தம், 10 கோடி ரூபாய்க்கு மேல், வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, கலெக்டர்களின் கட்டுப்பாட்டில், அரசு கருவூலங்களில், வைக்கப்பட்டு உள்ளது.

18ல் விசாரணை : உள்ளாட்சி தேர்தலை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், கட்டணம் திரும்ப கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு

உள்ளது. இந்த வழக்கு, 18ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தேர்தல் கமிஷனுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத் தால், கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டி இருக்காது. அது, நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே அமையும்; தற்போதைக்கு, கட்டணத்தை திருப்பி தரும் திட்டம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

அரசு செயலாளர்கள் அனைவரும் தினமும் ஒரு மணி நேரம் ஐகோர்ட்டில் ஆஜராகவேண்டும் நீதிபதிகள் எச்சரிக்கை!!

பொதுமக்கள் தரும் புகார் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அனைத்து அரசு துறைகளின் முதன்மை செயலாளர்கள் தினமும் காலையில் ஒரு மணி நேரம் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

ஆக்கிரமிப்பு

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், ‘விழுப்புரம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் உள்ள மொளச்சூர்-மரக்காணம் சாலையோர விவசாய நிலத்தை முகமது என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த பிப்ரவரி 10-ந் தேதி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மனு அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

நடவடிக்கை இல்லை

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கடந்த பிப்ரவரி மாதம் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளார். எனவே, இந்த ஆக்கிரமிப்பு தொடர்பான புகார் குறித்து அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி, அவர்களது கருத்துக்களை பெற்று, அதனடிப்படையில் விசாரணை நடத்தி, தகுந்த முடிவினை எடுத்து 3 மாதங்களுக்குள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு கூறி இந்த வழக்கை முடித்து வைக்க விரும்பவில்லை.

பொதுவாக, நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத விதிமீறல் கட்டிடம் குறித்து பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை.

அரசாணை

இதனால், புகார் கொடுப்பவர்கள் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். இதனால், ஐகோர்ட்டின் பணி கூடுகிறது. அதுமட்டுமல்ல இதுபோன்ற வழக்குகளை விசாரித்து, மனுதாரரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க, இந்த ஐகோர்ட்டு ஒன்றும் தபால் அலுவலகம் இல்லை.

ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின்படி பொதுமக்கள் தரும் புகார்களை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டை 3 நாட்களுக்குள் வழங்கவேண்டும். அந்த புகார் மீது ஒரு மாதத்துக்குள் தகுந்த முடிவினை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமும் ஆஜராகவேண்டும்

எனவே, பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தினமும் காலையில் ஒரு மணி நேரம் அனைத்து அரசு துறைகளின் முதன்மை செயலாளர்களும் இந்த ஐகோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதை தவிர வேறுவழி எங்களுக்கு தெரியவில்லை.

இதன்மூலம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை பிறப்பித்துள்ள அரசாணையை அரசு அதிகாரிகள் மீறமுடியாது. ஐகோர்ட்டின் பணி சுமையும் குறையும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பொம்மலாட்டம் நடத்தி பாடம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்!!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் வாயிலாக, எளிய முறையில் கதை சொல்லி, கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சார்ந்த பல்வேறு பயிற்சிகள் நடத்துவது வழக்கம். நடப்பு கல்வியாண்டில், 
ஐந்தாம் வகுப்பு வரை, மனப்பாட பகுதிகளை பாடலாக்குதல், அறிவியல் பாட செய்முறை பகுதிகள் அனிமேஷன் செய்தல், ஆங்கில எழுத்து உச்சரிப்பு குறித்த, குறுந்தகடு தயாரித்தல், என பல்வேறு திட்டங்களை, கல்வித்துறை நடைமுறைப்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப ரீதியில் கற்பித்தலை எளிமையாக்குவதால், மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

முதல் பருவத்தேர்வு முடிவடைந்ததால், பொம்மலாட்டம் மூலம், இரண்டாம் பருவப்பாடத்திட்டங்களை கற்பிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, ஆசிரியர் பயிற்றுநர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில, மாவட்ட, குறு மைய அளவில், பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணி வெளியிட்ட அறிக்கையில், பொம்மலாட்டம் வாயிலாக கதை சொல்லி கற்பித்தல் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயாரிப்பு உள்ளிட்ட, பயிற்சிகள் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

மாநில அளவிலான பயிற்சி, வரும் 18, 19 ஆகிய இரு தேதிகளில் நடக்கிறது. மாவட்ட அளவில், அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்குமான கற்பித்தல் பயிற்சி, வரும் 27, 28 ஆகிய இரு தேதிகளில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய வளாகத்தில் நடக்கிறது. இதில், தவறாமல் ஆசிரியர்கள் பங்கேற்பது அவசியம் என, தெரிவித்துள்ளார்

மகப்பேறு விடுப்பு 9மாதமாக நீட்டிப்பு அரசாணை விரைவில் வெளியிட வாய்ப்பு.

அரசு ஊழியர்களில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட 9 மாத மகப்பேறு விடுப்புக்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தற்போது 6 மாதமாக உள்ளது. இது 9 மாதமாக உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். 
இதை நிறைவேற்றும் வகையில், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, சட்டப்பேரவையில் 110- விதியின் கீழ், ‘அரசு பணியில் இருக்கும் தாய்மார்கள் தங்கள் பச்சிளம் குழந்தையை பேணிப் பாதுகாக்கும் வகையில் பேறு காலச் சலுகையாக வழங்கப்படும் 6 மாத மகப்பேறு விடுப்பு 9மாதமாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்தார்.ஆனால், இதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், செப்டம்பர் 30-ம் தேதி 6 மாத விடுப்பு முடியும்,அரசு பெண் ஊழியர்கள் விடுப்பை நீட்டிக்க முடியுமா முடியாதா என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்ட பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் கேட்டபோது இது தொடர்பாக அரசாணை இன்னும் கையெழுத்தாகவில்லை என கூறுகின்றனர். அரசாணையை விரைவில் வெளியிட்டால், மகப் பேறு விடுப்பு எடுத்துள்ள பெண் கள் பயன்பெறுவார்கள்’’ என்றார்.

அதிகாரிகள் விளக்கம்

இது தொடர்பாக பணியாளர் நலத் துறையினரிடம் கேட்ட போது,‘‘இதற்கான அரசாணை வெளியிட கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசு பரிசீலனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. விரைவில் அரசாணை வெளியாக வாய்ப்புள்ளது’’ என்றார்.

விடைத்தாள் எழுதும் முறை : வழிகாட்டுமா தேர்வு துறை?

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வில், விடைத்தாளில் பதில் எழுதுவது குறித்து, பள்ளிகளில் பல வழிமுறைகளை கற்று கொடுத்துள்ளனர். 
'விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும், பெரிய எழுத்துக்களால் எழுத வேண்டும். நீல நிற பேனாவை பயன்படுத்த வேண்டும்; கருப்பு வண்ண, 'ஸ்கெட்ச்' அல்லது பேனாவால், முக்கிய பாகங்களை கோடிட்டு காட்ட வேண்டும். விடைத்தாளின் பின்பக்கத்திலுள்ள, செய்முறை பயிற்சி பக்கத்தில், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்; அந்த பக்கம் கணக்கில் கொள்ளப்படாது' என, வழிமுறைகள் கூறப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், விடைத்தாளில் கோடுகள் போடலாமா; முக்கிய பகுதிகளை, வண்ண பேனா அல்லது கருப்பு பேனாவால் குறிக்கலாமா என, பெற்றோர் குழப்பமடைந்து உள்ளனர். மாணவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் வழிமுறைகள், பொதுத்தேர்வில் தடை செய்யப்பட்டால், மாணவர்கள் பாதிக்கப்படுவர்.எனவே, 'தற்போதே விடைத்தாளில் எழுதும் முறை பற்றியும், செய்யக்கூடாதவை பற்றியும், அறிவிப்பு வெளியிட வேண்டும்'என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'ஆல் பாஸ்' திட்டம் ரத்து? : அக்., 25ல் ஆலோசனை

எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, வரும், 25ல், டில்லியில், மாநில கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டாயமாக இலவச கல்வி அளிக்க வேண்டும்.
இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் யாரும், பெயில்ஆக்காமல், பாஸ் செய்யப்படுகின்றனர். இத்திட்டத்தால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துள்ளதாக, மத்திய அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், 'ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்வது அல்லது ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் என்று, மாற்றம் செய்வது, 10ம் வகுப்பு வரை, கட்டாய கல்விவழங்குவது' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து மாநில பள்ளிக் கல்வி அதிகாரிகள் அடங்கிய, மத்திய ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கமிட்டி, ஆறு மாதங்களுக்கு முன், மாநிலங்களின் ஆலோசனைகளை பெற்றது. மீண்டும், அக்., 25ல், டில்லியில், அனைத்து மாநில கல்வி அதிகாரிகளிடம் கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்துகிறது.

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை.

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ என்ற அச்சம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல் நடைபெறும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. 
தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் பணி குறித்து, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த மாதம், பள்ளி காலாண்டு விடுமுறையின்போது, தேர்தல்பயிற்சி வகுப்புக்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன் காரணமாக, காலாண்டு விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்ட மிட்டிருந்தவர்களின் கனவு தகர்ந்தது. எனினும், தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, தேர்தல் பணிக்கு தயாராகினர்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு செய்தது; இம்மனு மீதான விசாரணை, 18ம் தேதி நடைபெற உள்ளது.எனினும், குறித்த தேதியில் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.

 உயர் நீதிமன்றம், டிச., 30க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று, தன் உத்தரவில்கூறியுள்ளது. அதன்படி, டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டால், அரையாண்டு தேர்வு விடுமுறையில், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல், ஆசிரியர்களுக்கு ஏற்படும். அரசு ஊழியர்களும், விடுமுறைக்கு வெளியூர் செல்ல இயலாது. இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

TRB:இன்ஜி., பேராசிரியர் தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.

'அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்த வாரிய செய்திக்குறிப்பு: 
அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு, 22ல், நடைபெறுகிறது. தேர்வு அனுமதி சீட்டு, www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ .பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- மருத்துவரும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்!

மருத்துவ மாணவர்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம் என்கிறார் பி.ராஜா. 2015 ஆண்டு பேட்ச்சின் கர்நாடக மாநிலப் பிரிவைப் பெற்றவர், அதன் பயிற்சியில் தும்கூர் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியாற்றிவருகிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள முத்தாண்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. மூன்றாம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தவர் 8 கி.மீ தொலைவிலுள்ள நெய்வேலியின் செயிண்ட்பால் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ வரை பயின்றார். கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். விரும்பிப் படித்தார். பெற்றோரின் ஊக்கத்தால் யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தார். விரும்பிய ஐ.ஏ.எஸ். கிடைக்கும்வரை தொடர்ந்து ஐந்து முறை யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை எதிர்கொண்டார்.

இரண்டு கனவு

“ஆறாம் வகுப்பு படிக்கும்போது வெ.இறையன்பு எழுதிய ‘நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்’ புத்தகத்தைப் படித்ததும் ஐ.ஏ.எஸ். ஆர்வம் துளிர்த்தது. அதிலும், துப்பாக்கிச் சூடு, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பற்றிய வர்ணனைகள் மிகவும் ஈர்த்தன. ஆனால், மருத்துவராகும் கனவு என்னுள் ஆழமாக வளர்ந்துகொண்டிருந்தது. இதனால் எம்.பி.பி.எஸ். முடித்த பின்னர்த் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டே யூ.பி.எஸ்.சி. எழுத ஆயத்தமானேன்.

பிறகு சென்னை சென்று சங்கர் ஐ.ஏ.எஸ். கோச்சிங் அகாடமியில் பொதுக்கல்வி பாடப்பிரிவுக்காக மட்டும் பயிற்சி பெற்றேன். விருப்பப்பாடங்களான உயிரியல், மருத்துவ அறிவியலை நானே படித்தேன். மருத்துவ அறிவியலில் அதிகமாகப் படிக்க வேண்டி இருந்ததால் இரண்டாவது முயற்சியில் அதற்குப் பதிலாகப் புவியியல் எடுத்தேன். இரண்டாம்நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் நழுவவிட்டேன். மூன்றாவது முயற்சியில் ஐ.பி.எஸ். கிடைத்தது. எனது நோக்கம் ஆட்சியர் ஆவது என்பதால் மீண்டும் இருமுறை எடுத்த கடுமையான முயற்சியில் எனது எண்ணம் நிறைவேறியது. அதே நேரத்தில் ஐந்து முயற்சிகளிலும் நான் முதல்நிலை தேர்வில் ஒருமுறை கூடத் தவறவில்லை. இதற்கு எனது பள்ளியில் பாடம் நடத்தப்பட்ட முறை முக்கியக் காரணம்” என்கிறார் ராஜா.

எதிர்காலத்தில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத விரும்பும் பிள்ளைகளுக்குப் பள்ளிப் பருவத்திலிருந்தே ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்பது ராஜாவின் யோசனை. இதன் மூலம், புரிந்து படிக்கும் திறனையும் வளர்த்தெடுக்கலாம். இணையதளத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களையும் புத்தகங்களையும் பயன்படுத்தலாம் அதேபோல ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி போன்ற சேனல்களில் வரும் நேர்காணல், விவாதங்களைப் பின்தொடர்வது மிகவும் உதவும் என வழிகாட்டுகிறார் ராஜா.

யூ.பி.எஸ்.சி.க்கான முயற்சிகளுக்கு இடையே ராஜாவுக்கு, 2009-ல் கடலூர் மாவட்டம் புலியூரில் தமிழக அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றில் மருத்துவப் பணி கிடைத்தது. இதில் சேர்ந்து யூ.பி.எஸ்.சி.க்கான மூன்றாவது முயற்சியைத் தொடர்ந்தபோது 239-வது ரேங்கில் 2011-ம் வருட பேட்ச்சில் கர்நாடகா மாநிலப் பிரிவின் ஐ.பி.எஸ். கிடைத்தது. இதன் பயிற்சியின் போது தாவன்கெரே, மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கோடு ஏ.எஸ்.பி.யாகவும், கொப்பல் மாவட்டத்தின் எஸ்.பி.யாகவும் பணியாற்றினார். அப்போது, யூ.பி.எஸ்.சி. தேர்வின் இரு விருப்பப் பாடங்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டது. இத்துடன் பொதுக் கல்வியிலும் பாடத் திட்டம் நான்காகக் குறைக்கப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்துத் தேர்வுக்குத் தயாரானவர் ஐந்தாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ். பெற்றார்.

நான் எப்படிப் படித்தேன்

யூ.பி.எஸ்.சி. எழுத விரும்புபவர்கள் அதற்கு முன்பாக அதன் பழைய முதல்நிலை வினாத்தாள்களுக்கான பதிலை எழுதிச் சுயபரிசோதனை செய்வது முக்கியம். இந்தக் கேள்விகளைப் பாடங்களுக்கு ஏற்றபடி தனியாகப் பிரித்து எழுதினால் எதில் பின்தங்கியிருக்கிறோம் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இதைச் சோதித்துப் பார்க்கப் பயிற்சி நிலையங்கள் அவசியம் இல்லை. இதன் மூலமாக நமக்கு எதில் அதிகப்படியான பயிற்சி தேவை என்பதைக் கண்டுபிடித்து அதன் பிறகு பயிற்சி நிலையங்களை அணுகும்போது பலன் இருக்கும்.

குறிப்பாகக் கணிதம், அறிவியல் பாடங்களைச் சுயமாகப் படிப்பது கடினம். ஆகவே, கலை இலக்கியத் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் யூ.பி.எஸ்.சி. தேர்வில் கணிதம், அறிவியலை விருப்பப்பாடங்களாக எடுக்காமல் இருப்பது நல்லது. ஆனால், அறிவியலில் பட்டம் பெற்றவர்கள் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தாராளமாக எடுக்கலாம்.

அடுத்து, ஒரே பாடத்தைத் தொடர்ந்து படிக்கும்போது சலிப்பு உண்டாகும், கவனச் சிதறல் ஏற்படும். இதனாலேயே ஒரு மணி நேரத்துக்கு மேல் அடுத்த பாடத்தை நான் படிக்க ஆரம்பித்துவிடுவேன். இந்த மாதிரிப் புதிய பாடங்களைப் படிக்கும்போது நம்முடைய புரிதல் திறன் புத்துணர்வு பெறும்.

விடைத்தாள் எழுதும் முறை : வழிகாட்டுமா தேர்வு துறை?

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வில், விடைத்தாளில் பதில் எழுதுவது குறித்து, பள்ளிகளில் பல வழிமுறைகளை கற்று கொடுத்துள்ளனர். 
'விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும், பெரிய எழுத்துக்களால் எழுத வேண்டும். நீல நிற பேனாவை பயன்படுத்த வேண்டும்; கருப்பு வண்ண, 'ஸ்கெட்ச்' அல்லது பேனாவால், முக்கிய பாகங்களை கோடிட்டு காட்ட வேண்டும். விடைத்தாளின் பின்பக்கத்திலுள்ள, செய்முறை பயிற்சி பக்கத்தில், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்; அந்த பக்கம் கணக்கில் கொள்ளப்படாது' என, வழிமுறைகள் கூறப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், விடைத்தாளில் கோடுகள் போடலாமா; முக்கிய பகுதிகளை, வண்ண பேனா அல்லது கருப்பு பேனாவால் குறிக்கலாமா என, பெற்றோர் குழப்பமடைந்து உள்ளனர். மாணவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் வழிமுறைகள், பொதுத்தேர்வில் தடை செய்யப்பட்டால், மாணவர்கள் பாதிக்கப்படுவர்.எனவே, 'தற்போதே விடைத்தாளில் எழுதும் முறை பற்றியும், செய்யக்கூடாதவை பற்றியும், அறிவிப்பு வெளியிட வேண்டும்'என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.