Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 22 January 2017

வரும் பிப்ரவரி 11மற்றும்12 ல் கடலூரில் கல்வியாளர்கள் சங்கமத்தின் *சங்கமம்2017*

தயாராகுங்கள்...
தயார்படுத்துங்கள்...

அற்புதமான விருந்தினர்களுடன் ஆற்றல் வாய்ந்த ஆசிரியர்களின் சங்கமம்....

நிகழ்வுகளின் வரிசை

*வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை*

*பொம்மை பொம்மை பார்*

*பளிச் வகுப்பறை*

*ஈகோ வரமா? சாபமா?*

*இவ்வளவுதான் தொழில்நுட்பம்*

*தமிழா! தமிழால்!தரணி ஆள்வாய்!*

*புன்னகை மலர்கள்*

*புத்தம்புது பூமி வேண்டும்*

*பெண்கல்வியும் பாதுகாப்பும்*

*மாற்றங்களை உருவாக்குவோம்..*

கால் பதிக்கும் இடமெல்லாம் தனித்தடம் பதிப்போம்...

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை

'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது. 
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வி பணியை தவிர, பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர். பள்ளிகளிலும், கல்வி சாராத மற்ற பணிகளை செய்கின்றனர்; அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள் போன்றவற்றில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், கல்வியில் ஆசிரியர்களின் கவனம் குறைவதாக, புகார் கூறப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்வதற்காக, பல்வேறு துறை சார்ந்த செயலர்கள் அடங்கிய குழு ஒன்றை, பிரதமர் மோடி அமைத்தார். இக்குழு தன் ஆய்வை முடித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அடிப்படை பணி : இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி வழங்குவது மட்டுமே, பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. பாடம் நடத்துவது உட்பட, கல்வி தொடர்பான பணிகளில் மட்டுமே, அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். கால்நடை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, போலியோ ஒழிப்பு, ரேஷன் கார்டு சரிபார்ப்பு என, வெவ்வேறு அரசு மற்றும் பொது பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் குறைந்து, கல்வியில் அவர்கள் கவனம் இருப்பதில்லை; மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், இந்நிலை காணப்படுகிறது. ஆசிரியர்கள், கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். மேலும், பள்ளி நிர்வாகங்களின் கட்டளைப்படி, வேறு சில பணிகளையும் செய்கின்றனர்.

தடுக்க வேண்டும் : பல்வேறு துறை செயலர்களை கொண்ட குழு நடத்திய ஆய்வில், இந்த தகவல்கள் உறுதியாகி உள்ளன. பள்ளி ஆசிரியர்களை, கல்வி அல்லாத மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என, அக்குழு பரிந்துரைத்து உள்ளது.

கல்வியை தவிர மற்ற பணிகளில், ஆசிரியர்களின் கவனம் செல்லக் கூடாது என, அறிவுறுத்தி உள்ளது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், பள்ளி ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளை வகுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது; விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்வி உரிமை சட்டம் : கல்வி உரிமை சட்டத்தின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை, தேர்தல் பணிகள் ஆகிய மூன்று பணிகளுக்கு மட்டுமே, பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது; மற்ற பணிகளுக்கு, அவர்களை பயன்படுத்துவதை, அரசு நிறுத்த வேண்டும் என, அச்சட்டம் கூறுகிறது.

பஸ்களில் ஏற்றும் ஆசிரியர்கள்! : பிரதமர் மோடி அமைத்த குழு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் பற்றி கூறியுள்ளதாவது:அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்களும், கல்வி அல்லாமல், மற்ற பணிகளை செய்யும் சூழல் நிலவுகிறது. கட்டணம் வசூலிப்பது, குழந்தைகளை பள்ளி பஸ்களில் ஏற்றி அனுப்புவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.

இவ்வாறு அந்த குழு கூறியுள்ளது.

'NEET'' நுழைவுத்தேர்வு தேதி நாளை அறிவிப்பு?

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு தேதி, நாளை அறிவிக்கப்படும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன. 'மருத்துவப் படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம், நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, தமிழக அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகளில், நீட் அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு நீட் தேர்வில், தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படாது என, தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைவரும் நீட் தேர்வை எழுத வேண்டும் என, கூறப்படுகிறது. இது குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்போ, சுகாதாரத் துறையோ, தெளிவான அறிவிப்பு வெளியிடவில்லை.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர்கள் சேர்க்கைக்கான, நீட் நுழைவுத் தேர்வு, மே, 7ல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளை மறுநாள் துவங்கலாம் என்றும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, நாளை வெளியாகும் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

எளிய முறையில் கணிதம் படிக்க 'டிவிடி' அறிமுகம்

கோவையைச் சேர்ந்த உமாதாணு என்பவர், எளிய முறையில் கணிதம் படிக்க, 'டிவிடி'யை உருவாக்கியுள்ளார். கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் உமாதாணு, 77. இவர், கணிதத்தை எளிமையாக கற்பது குறித்து பயிற்சிகள் அளிக்கிறார். 
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, அந்தமான், துபாய் உட்பட பல பகுதிகளுக்கும் சென்று, கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.உமாதாணு, மூன்று மணி நேரம் ஓடக்கூடிய, 'டிவிடி'யை தயாரித்துள்ளார். கணிதத்தில், அவரது புதிய அணுகுமுறை, புதிய கருத்துகள், கண்டுபிடிப்புகள், எளிய பயிற்சிகள் ஆகியவை, பாடத்தை இனிமையாக்குகின்றன.மாணவர்கள், போட்டித் தேர்வு, வங்கி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கும் இந்த, 'டிவிடி' மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தொடர்புக்கு: 9360482003

பள்ளிகளில் ஜல்லிக்கட்டு பாடம்

ஜல்லிக்கட்டு குறித்து, பள்ளிகளில், விபரமாக பாடம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம், கல்லுாரிகளை கடந்து, பள்ளிகளில் பாடமாக நுழைந்துள்ளது. ஜல்லிக்கட்டு குறித்தும், தமிழர்களின் கலாசாரம் குறித்தும், பள்ளிகளில், மாணவர்களுக்கு விளக்கும் வகையில், ஆசிரியர்களால் பாடம் நடத்தப்படுகிறது.

ராணுவ அகாடமி நுழைவுத்தேர்வு

பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமி மற்றும் கடற்படையில் பயிற்சி பெறுவதற்கான, நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமியில், ராணுவ அதிகாரி படிப்பிலும் சேர முடியும். 
இதற்கான, தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை நுழைவுத்தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது; பிப்., 10 வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடித்தோரும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவு

மாணவர்களின் போராட்டத்தில், தங்களையும் இணைத்து கொள்வதாக, அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அறிவித்து உள்ளனர். அரசு கல்லுாரி பேராசிரியர் கழக பொதுச் செயலர், தாமோதரன் கூறுகையில், 
''மாணவர்களின் போராட்டம் நியாயமானது; மனதார வரவேற்கிறோம். மாணவர் போராட்டங்களில், கல்லுாரி பேராசிரியர்களும் இணைந்து கொள்கிறோம்,'' என்றார்.

'ஏரோநாட்டிக்ஸ்' பாட திட்டம் வெளியீடு

அறிவியல் கல்லுாரிகளில், முதன்முறையாக, 'ஏரோநாட்டிக்ஸ்' படிப்பு துவங்கப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.

ஏரோநாட்டிக்ஸ் என்ற, விமான பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு, இதுவரை, இன்ஜி., கல்லுாரிகளிலும், பல்கலைகளிலும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதிலும், குறைந்த இடங்களும், அதிக கட்டணமும் உள்ளதால், பல மாணவர்களால் சேர முடியவில்லை.

ஏரோநாட்டிக்ஸ் துறையில், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால், அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், பி.எஸ்சி., ஏரோநாட்டிக்ஸ் பட்டப்படிப்பை துவங்க, யு.ஜி.சி., உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, இந்த படிப்புக்கான புதிய பாடத்திட்டம், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பாடத்துக்கு, தரம் வழங்கும், கிரெடிட் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும், கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டு புதுப்பிக்க புது வசதி

ரேஷனில் பொருட்கள் வாங்காத, 'என்' கார்டுதாரர்கள், இணைதயளத்தில் புதுப்பிக்கும் வசதியை, உணவுத் துறை துவக்க உள்ளது. எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு பிரிவில், நிறைய ரேஷன் கார்டுகள் உள்ளன. 2016 டிச., மாதத்துடன், ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம் முடிந்தது.
'என்' கார்டு தவிர, மற்ற கார்டுகளில், உள்தாள் ஒட்டப்பட்டு, ஆயுட்காலம், வரும் டிச., வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 'என்' கார்டுதாரர்கள், இணையதளத்தில் புதுப்பிக்கும் வசதியை, உணவுத் துறை துவக்க உள்ளது.

இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, 65 ஆயிரம், 'என்' கார்டுகள் உள்ளன. அவர்கள், பொது வினியோக திட்ட இணையதளத்தில், கார்டு புதுப்பிக்கும் வசதி துவங்கப்பட உள்ளது. அதன்படி கார்டுதாரர், இணையதள பக்கத்தில் உள்ள, புதுப்பிக்கும் பகுதியில், கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், அதில் வரும் பக்கத்தை, 'பிரின்ட்' எடுத்து, ரேஷன் கார்டில் இணைத்து கொள்ளலாம். ஓரிரு தினங்களில், இந்த சேவை அதிகாரபூர்வமாக துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இ - சேவை மையங்களிலும் மின் இணைப்பு விண்ணப்பம்

இணையதளம் மூலம், வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறும் வசதி, அரசு, இ - சேவை மையங்களிலும் துவக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: 
வீடு மற்றும் தொழிற்சாலைகளின் புதிய மின் இணைப்புக்கு, மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது, இதற்கான விண்ணப்பம், தமிழக அரசின், இ - சேவை மையங்களுக்கும் விரிவாக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் பிப்.7ல் ஸ்டிரைக்

புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் ஏழாம் தேதி, நாடு தழுவிய அளவில், ஒருநாள் போராட்டம் நடத்தப் போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

டில்லியில், சங்கத்தின் செயலர், வெங்கடாசலம் கூறியதாவது: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி, 70 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை. வாரம், 24 ஆயிரம் ரூபாய் வழங்க, பல வங்கிகளால் முடியவில்லை. அதனால், பணம் வழங்குவதற்கான கட்டுப்பாட்டை நீக்கி, வங்கிகளுக்கு தேவையான பணத்தை வழங்க, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரிசர்வ் வங்கியின் பண நிர்வாகத்தில், அரசு தலையிடக் கூடாது. அதன், தன்னாட்சி உரிமை காப்பாற்றப்பட வேண்டும். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், உயிரிழந்த மக்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பால், விடுமுறையின்றி, கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம், ௭ம் தேதி, நாடு தழுவிய அளவில், ஒருநாள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உட்பட பல சங்கங்கள், ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.