Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 4 February 2017

தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு மேல் சபையில் மசோதா தாக்கல்..

தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிடக் கோரும் தனிநபர் மசோதாவை டெல்லி மேல்-சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்தார்.

 அது குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில் கூறிய தாவது:- 

கற்பிக்கும் பணியில் மட்டுமே ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்தில் நான் உடன்படுகிறேன். தேர்தல் பணியில் யாரை ஈடுபடுத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது. எனவே, திருச்சி சிவாவின் உணர்வுகள், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். அனைத்து கட்சி கூட்டம் எப்போது நடந்தாலும், இதை வலியுறுத்தி பேச திருச்சி சிவாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
ஆகவே, அவர் இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என கூறினார்.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை' -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தமிழக அரசின் நீட் தேர்வு சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது
. நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், எதிர்க்க வேண்டியவற்றை, எதிர்த்துள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை' என்றார்.

நன்றி
விகடன்

NEET Exam -சட்டத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்: நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது நல்லது- தமிழக அரசு அதிகாரிகள் தகவல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டசட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை யாக நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண் ணப்பிப்பது நல்லது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக,மீதமுள்ள 85 சதவீதம் மாநில அரசுக்கு உள்ளது.

அதேபோல் தனியார் (சுயநிதி) மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அரசு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) இருந்து விலக்கு பெறும் வகையிலான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார்மருத்துவக் கல் லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும். மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 31-ம் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது. விண்ணப்பிக்க மார்ச் மாதம் 1-ம் தேதி என்ற காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை நம்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிடலாமா அல்லது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக் கலாமா என்ற குழப்பமான நிலையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி களில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறவே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப் பட்டால்தான், இந்த சட்டம் செல்லத் தக்கதாக இருக்கும். நீட் தேர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீட் தேர்வு நடக்கும் தேதியும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளையும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும்போது கிடைக்கட்டும், மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நல்லது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து விட்டால், கடந்த ஆண்டு போலவே பிளஸ் 2 தேர்வு அடைப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

ஒருவேளை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்காவிட்டாலோ, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டாலோ மாணவர்கள் மருத்துவம் படிப்பது கேள்விக்குறியாகிவிடும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் குறைதீர் மன்றம்: யுஜிசிக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறைதீர் மன்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் குறைதீர் மன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று யுஜிசி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் அந்த விதிகள் கடைபிடிக்கப்படவில்லை.
எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொதுநல மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி சங்கீதா திங்க்ரா ஷெகல் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
2012ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குவிதிகளின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் குறைகளைக் கேட்கும் "ஒம்பட்ஸ்மன்' அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இதேபோல், அனைத்து கல்லூரிகள் அல்லது கல்லூரிகளைக் கொண்ட கூட்டமைப்பிலும் குறைதீர் மன்றம் ஏற்படுத்த வேண்டும். தில்லி பல்கலைக்கழகமும் இதுதொடர்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, இன்றிலிருந்து வரும் 4 மாதங்களுக்குள் தில்லி பல்கலைக்கலைக்கழகம் இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்து முடித்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர
விட்டனர்.

BSNL அதிரடி -ரூ.36-க்கு 1GB டேட்டா

ஜியோவுக்கு கடுமையான போட்டிக் கொடுக்க பி.எஸ்.என்.எல்  பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் ரூ36-க்கு 1GB என்ற 3G டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல்.

சிறப்புத் திட்டமான இதன்மூலம் ரூ.291-க்கு 8GB வரை பெறலாம் என்றும்,ரூ.78-க்கு 2GB பெறலாம் என்றும்  பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.

இதற்கு 28 நாள்கள் வேலிடிட்டி. மேலும், இது முன்னர் இருந்ததை விட நான்கு மடங்கு கூடுதல் (டேட்டா) என்றும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.

தமிழ் தெரியாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு.

'தமிழ் தெரியாத ஆசிரியர்களுக்கு, விதிகளை மீறி, கல்வித்துறையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது' என, ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில், தமிழில் தேர்ச்சி பெறாத, தமிழ் தெரியாத ஊழியர்களுக்கு,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழ் தேர்ச்சிதேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, பள்ளி கல்வித்துறையில், ஆசிரியராக சேரும், பிறமொழி ஆசிரியர்கள், தமிழில் தேர்ச்சிபெறுவது கட்டாயம்.ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற, விதிகள் உள்ளன.

இந்நிலையில், பல ஆண்டுகளாக தமிழில் தேர்ச்சி பெறாத, பிறமொழி ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடக்க கல்வி துறையில், தமிழ் தெரியாதோருக்கு, பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியங்களில், 250 ஆசிரியர்கள் தமிழ் தேர்ச்சி பெறாமல், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கூறுகையில், 'விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து, அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். தமிழில் தேர்ச்சிபெறாதோருக்கு, உடந்தையாக செயல்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

நீட்' தேர்வு எழுத புதிய சலுகை

மூன்று முறை தேர்வு எழுதியவர்களுக்கு, 'நீட்' எழுதுவதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இணையதளத்தின், 'கோடிங்' மாற்றாததால், விண்ணப்பிப்பதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு, மே 7ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பு, ஜன., 31ல் வெளியானது. இந்த தேர்வில், கடந்த மூன்று முறை எழுதியவர்கள், விண்ணப்பிக்க முடியாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால், 'நீட்' தேர்வு முழுமையாக, இந்த ஆண்டுதான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், மூன்று வருட நிபந்தனையை தளர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதை தொடர்ந்து, மூன்று வருடம் எழுதினாலும், இந்த முறை தேர்வு எழுதுவோருக்கு, இது முதல் தேர்வாகவே கணக்கில் கொள்ளப்படும் என, மத்திய சுகாதாரத்துறை நேற்று அறிவித்தது.

ஆனால், சி.பி.எஸ்.இ., - நீட் இணையதளத்தில், இந்த விதிகளுக்கு ஏற்ப, 'கோடிங்' மாற்றம் செய்யப்படவில்லை. அதனால், மூன்று வருடம் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

விளையாட்டுகளில் தமிழகம் முன்னேற்றம் பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமிதம்

காரைக்குடி, :''தேசிய அளவில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேசினார்.

பள்ளிகளுக்கான மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் காரைக்குடியில் நேற்று துவங்கின.துவக்கி வைத்து இயக்குனர்  கண்ணப்பன் பேசியதாவது:  

மூன்று ஆண்டுக்கு முன் பள்ளிகளுக்கான விளையாட்டுக்கள் குறுவட்ட அளவில் நடந்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி மாநில அளவில் நடத்தச் செய்தார். கடந்த 2012--13-ல் பள்ளி கல்வித்துறைக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது; 2016--17ல் 24 ஆயிரத்து 121 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.மாணவர் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை தாண்டி உள்ளது. தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. பள்ளி அளவில் 14 விளையாட்டுக்கள் மட்டுமே பல ஆண்டுகளாக இருந்தன. அதில், 15 புதிய விளையாட்டுகளை புகுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. செஸ் போன்ற விளையாட்டுகளிலும் கிராம மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த தேசிய போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 57 தங்கம், 58 வெள்ளி, 64 வெண்கல பதக்கங்களை வென்றனர். 
கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறையில், விளையாட்டு போட்டிகளுக்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2012--13-ல் தேசிய அளவில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், கடந்த ஆண்டு ஐந்தா-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. 
இவ்வாறு பேசினார்.அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுப்பையா, இணை இயக்குனர் பொன்னையா, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

TNTET- ஆசிரியர் தகுதி தேர்வு - ஒரு சிறப்பு பார்வை

ஆசிரியர்  தகுதி தேர்வு - சிறப்பு பார்வை

முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)
இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்பிற்கானது)

இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE ) 2009 ன் பிரிவு 23, உப பிரிவு (1) ல் குறிப்பிட்டுள்ளபடி, ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழுமம் (NCTE ) 2010 – ஆகஸ்டு 23 –ம் தேதி வெளியிட்ட குறிப்பாணையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகளாக சிலவற்றை வரையறுத்துள்ளது.

RTE சட்டம் பிரிவு 2 ன் படிஆசிரியராக நியமிக்கப்படும் ஒருவருக்கு மிக முக்கிய தகுதியாக எதிர்ப்பார்க்கப்படுவது என்னவென்றால் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET ) தேர்ச்சியடைந்திருப்பது அவசியம்.

ஆசிரியராக நியமிக்கப்பட இருக்கும் ஒருவருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET ) குறைந்தபட்சத் தகுதியாக வைத்திருப்பதன் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் ஒரு தேசிய தரத்தையும் அடையாளத்தையும் கடைப்பிடிக்க.
ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களும், மாணவர்களும் தங்களுடைய செயல்திறனை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்த.
அரசானது ஆசிரியர்களின் தரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்த. அந்தந்த அரசால் நியமிக்கப்படும் வல்லுநர் குழுவால் இந்தத் தேர்வானது நடத்தப்படும்.

கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி இத்தேர்வானது நடத்தப்படும்.

தகுதி:-

கீழ்க்கண்ட நபர்கள் இந்த TET தேர்வை எழுதத் தகுதியானவர்கள்:

ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் தேவையான கல்வித் தகுதியையும், தொழிற்கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் (NCTE) குழுமம் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு ஆசிரியப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.

RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் ஒரு மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு, இந்த TET தேர்வை எழுதுவதற்கான தகுதிகளிலிருந்து சில விலக்குகளை அளிக்க விரும்பினால் RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் அளித்துக் கொள்ளலாம். இந்த விதிவிலக்குகள் மத்திய அரசினால் உப பிரிவின் கீழ் ஒரு குறிப்பாணையாக வெளியிடப்படும்.

TET-ன் அமைப்பு மற்றும் பொருளடக்கம்:-

ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அமைப்பு மற்றும் பொருளடக்கம் கீழ்வரும் பத்திகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாக் கேள்விகளும் சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுதும் வகைக் கேள்விகளே. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் தரப்பட்டிருக்கும்.
அவற்றில் ஒன்று மட்டுமே சரியான பதில். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பது இல்லை.

தேர்வு நடத்தும் குழு கட்டாயமாக பின்வரும் அமைப்பு மற்றும் பொருளடக்கத்தை பின்பற்ற வேண்டும்.

TET இரண்டு தேர்வுகளைக் கொண்டது.

முதல் தேர்வு 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.

 இரண்டாவது தேர்வு 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.

 ஒருவர் 1 முதல் 5 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும், 6 முதல் 8 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும் கட்டாயமாக இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும்.

முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)
கேள்விகள்: 150

அமைப்பு மற்றும் பொருளடக்கம் (அனைத்தும் கட்டாயம்)
(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) மொழிப்பாடம் – 1 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம் – 2 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iv) கணிதம் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(v) சூழ்நிலை அறிவியல் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்

கேள்விகளின் தரமும் இயல்பும்:

முதல் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரி்க்கும்போது, தேர்வு நடத்தும் குழு கீழ்க்கண்ட காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:

6 முதல் 11 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.

கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.

மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.

கணிதம் மற்றும் சூழ்நிலை அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 1 முதல் 5 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.

முதல் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 1 முதல் 5 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் நடுநிலை வகுப்பு வரை இருக்கலாம்.

இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்புகளுக்கானது)
கேள்விகள்: 150

அமைப்பு மற்றும் பொருளடக்கம் அனைத்தும் கட்டாயம்

(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) மொழிப்பாடம்–1(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம்–2(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
a. கணிதம் மற்றும் ஆசிரியர்களுக்கானது: கணிதம் மற்றும் அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
b. சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கானது: சமூக அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
c. மற்ற ஆசிரியர்களுக்கானது: 4 (a) அல்லது 4(b)

இரண்டாம் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரிக்கும்போது தேர்வு நடத்தும் குழு கீழ்க்கானும் காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் 11 முதல் 14 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.

கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.

மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.

கணிதம், சூழ்நிலை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 6 முதல் 8 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.

இரண்டாம் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 6 முதல் 8 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் உயர்நிலை வகுப்பு வரை இருக்கலாம்.

கேள்வித்தாள் இரண்டு மொழிகளில் இருக்க வேண்டும்:

முதல் மொழி அந்தந்த அரசுகள் தீர்மானிக்க வேண்டும்

இரண்டாம் மொழி ஆங்கிலம்

காவலர் பணியிடத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 சதவிகித பணி இடங்களுக்கு தருமபுரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்புவிடுத்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 15,664 காலிப் பணியிடங்கள் உள்ளன.இதில் 5 சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்குள்பட்ட, பணியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் நிலையத்தில் கிடைக்கும் விண்ணப்பங்களை வாங்கி நிரப்பி, உரிய சான்றுகளுடன் வரும் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
  விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தருமபுரி மாவட்ட நல அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தேர்வுக்கான முன்பயிற்சி வரும் பிப். 13ஆம் தேதி ஒட்டப்பட்டியிலுள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வழங்கப்படும்.